அதிகாலை முதல் அதிரடியாக நடந்த ரெய்டு.. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரூ. 18 லட்சம் பறிமுதல்!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 18.37 லட்சம் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 18.37 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டில் இருந்து 1,872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ வெள்ளி பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
தேசிய குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சி.விஜயபாஸ்கர் சான்று தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை, மதுரை, சேலம், தேனி, உள்பட 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, “என் அப்பார்ட்மெண்டில் 3 அறைகள், 1 ஹால், 2500 சதுர அடி. எங்களது வீட்டில் 12 மணி நேரம் சோதனை செய்துள்ளனர்.
திமுக அரசு ஒரு தனிநபர் மீது கொண்ட காட்டம் காரணமாகவும், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவும் இந்த சோதனை நடைபெற்றது என்று கருதுகிறேன். ஏற்கனவே நான் லஞ்ச ஒழிப்புதுறையின் சோதனையை எதிர்கொண்டேன். அதை தொடர்ந்து இப்போது இரண்டாவது முறையாக சந்தித்தேன். நான் செய்தியாளர்களை சந்திக்க வரும்போது எனது வீட்டில் இருந்து 120 ஆவணங்கள் கிடைத்தாக தொலைக்காட்சியில் சொன்னார்கள். ஆனால் எனக்கு கைப்பட எழுதி கொடுத்த கடிதத்தில் எனது இரண்டு கைப்பேசிகளை தவிர வேறு எதுவும் கைப்பற்றபடவில்லை என தெரிவித்திருந்தனர்.
எனது மீது பதிந்த வழக்குப்படி, ஒரு அரசு மருத்துவ கல்லூரிக்கு என்ன விதிமுறைகளை பின்பற்றி உள்ளோமோ, அதே விதிமுறையை பின்பற்றிதான் ஒப்புதல் அளித்தோம். தமிழ்நாடு அரசு சார்பில் எங்களுக்கு கல்லூரி தொடங்க எந்த ஆட்சேபம் இல்லை என்று மட்டுமே தெரிவித்தோம். இதுபோன்று தற்போது திமுக அரசும் செயல்பட்டு வருகிறது.
அப்படி பார்த்தால் எங்கள் மீது 11 மருத்துவ கல்லூரி பெற்று கொடுத்ததற்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% பெற்று கொடுத்ததற்கு வழக்கு போட வேண்டும். அப்படி போட்டாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். திமுக அரசு செய்தது அரசியல் காழ்புணர்ச்சியின் உச்சக்கட்டம்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக விஜயபாஸ்கர் குடும்பத்தினர் தெரிவிக்கையில் அதிகாரிகள் கொண்டு வந்த பிரிண்டரை மட்டுமே எடுத்துச்சென்றதாகவும் எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.