Annamalai Letter : தொடர் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம்..! அமித்ஷாவுக்கு அவசரமாக கடிதம் எழுதிய அண்ணாமலை..! கடிதத்தில் இருப்பது என்ன..?
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டுவெடிப்பு விவகாரங்களில் தலையிடுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு பாஜக அலுவலகங்கள் மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது மாநிலக் காவல்துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தப் பிரச்சினையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட வேண்டும் என்றும் அமித் ஷா நேற்று (செப்.24) கோரியுள்ளார்.
அண்ணாமலை கடிதம்
“பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தியவர்கள், பாஜக செயல்பாட்டாளர்களின் கார்கள், அலுவலகங்கள், சொத்துகளுக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நாங்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும் தமிழ்நாடு அரசுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் உங்கள் அலுவலகத்தை நாங்கள் நாடுகிறோம்” என்று அண்ணாமலை அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
டிஜிபி எச்சரிக்கை
முன்னதாக கோவையில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து, 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
”மாநில கமாண்டோ படைப் பிரிவு, சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை மெற்கொள்ளப்பட்டு வருகிறது” என சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இன்றும் பெட்ரோல் குண்டுவீச்சு
மற்றொரு புறம், திருப்பூர் அங்கேரிப்பாளையத்தில் பாஜக கோட்ட பொறுப்பாளர் பாலு என்பவரின் முன்னாள் வீட்டின் முன்பும், கன்னியாகுமரி பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான கல்யாண சுந்தரம் என்பவரது வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
கோவையில், தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு நேற்று (செப்.24) முதல் பலப்படுத்தப்பட்டது. காவல் துறையினர் மட்டுமின்றி சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காமாண்டோ படை, அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4,000 காவலர்கள் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி மோகனுக்கு சொந்தமான கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சாய்பாபா காலனி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரண்டு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.
கோவை ஆட்சியர் பேட்டி
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தலைமை செயலாளர் தலைமையில் 17 மாவட்ட உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டம்’நடைபெற்றது. கோவையில் தொடர் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். கோவை மாவட்டத்தில் நடந்த 7 சம்பவங்களில் உயிர் மற்றும் உடமைகள் சேதம் அடையவில்லை.
பொது மக்கள் பதட்டமோ, அச்சமோ பட வேண்டிய சூழல் இல்லை. சிடிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மத நல்லிணக்கத்திற்கான கூட்டங்கள் நடத்தி வருகிறோம். 94 ஜமாத் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற்றது. மாலை இந்து அமைப்புகளின் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஊரக மற்றும் மாநகரப் பகுதிகளில் சம்பவங்கள் நடந்தாலோ, வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்ட நபர்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் தகவல் அளிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில சமூக வலைதளங்களில் மக்களிடம் பதட்டத்தை உருவாக்கும் வகையில் வெடிகுண்டு வீசப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. வெடிகுண்டு வீச்சு நடைபெறவில்லை. இன்னும் ஒரிரு நாளில் தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.