10 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன - அண்ணா பல்கலை., துணைவேந்தர்
செயற்கை நுண்ணறிவு துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அக்கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணை தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, கல்லூரி முதல்வர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல் ராஜ் கலந்து கொண்டு 25 பேருக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 42 மாணவ, மாணவிகள் உட்பட 1331 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் உரை நிகழ்த்திய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்து நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர் வளம் நிறைந்த இந்தியாவில் இந்நிறுவனங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் பொறியியல் பட்டதாரிகள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் வாயிலாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கும் வாய்ப்பினையும் மாணவ - மாணவியர் பெற்று வருகின்றனர். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நீடித்த வளர்ச்சி கொண்ட துறைகள் கோலோச்சும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார். பொறியியல் பட்டதாரிகள் தங்களது எதிர்கால வாழ்வினை சிறப்பாக அமைத்துக் கொள்ள புதிய தொழில்நுட்பங்களை அவ்வப்போது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். போட்டி நிறைந்த உலகில் எதிர்கொள்ள நேரிடும் எந்தவித நெருக்கடியையும் உந்து சக்தியாக மாற்றி அமைக்கும் போது இளைஞர்களின் முழுமையான ஆற்றல் வெளிப்படும்” என்று தெரிவித்தார்.