Anbumani Ramadoss : வன்னியர் சமூகத்துக்கான 10.5% இட ஒதுக்கீடு : முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த அன்புமணி ராமதாஸ்...!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் மு .க ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் , கௌரவத் தலைவர் ஜி கே மணி , பாமக இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே மூர்த்தி , வழக்கறிஞர் பாலு ஆகியோர் சந்தித்தனர். சந்திப்பின்போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி வன்னிநர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
10.5 சதவீத இடஒதுக்கீடு
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரை கூட்டாக இன்று சந்தித்தோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கான 10.5 , சீர் மரபினருக்கு 2.5, இதர பிறப்படுத்தப்பட்டோருக்கு 7 விழுக்காடு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் உருவாக்கினர் .
வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூன்று மாதத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதை விரைவுபடுத்தி இந்தக் கல்வியாண்டுக்குள் வன்னியர் உள் ஒதுக்கீட்பை வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்தினோம்” என்றார்.
மேலும், "வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கு முன்பாக வன்னியர் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினர் 40 விழுக்காடு இருக்கின்றனர். இரண்டு சமூகமும் பின் தங்கியுள்ளனர். இரண்டு சமூகமும் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது , சீர் மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கும் ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் எங்களுக்கு உடந்தை கிடையாது , அதில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் ஏன் சேர்க்கப்படவில்லை?" என்றார்.
”காவேரி உபரி நீர் திட்டம்”
இதனை தொடர்ந்து பேசிய அவர், ”தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு காவிரி நீரில் 500 டிஎம்சி கடலில் வீணாக கலந்துள்ளது. காவிரி நீரில் 3 டிஎம்சியை தர்மபுரி மாவட்ட ஏரி குளங்களில் நிரப்ப வேண்டும். கொள்ளிடம் உபரிநீரை அரியலூர் மாவட்ட ஏரி, குளங்களுக்கு நிரப்பும் வகையில் அரியலூர் சோழர் பாசன திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் தடுப்ணை கட்டவும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
”போதைப் பொருள் தொடர்பாக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியர் , காவலர்களுடன் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்” என்று கூறினார்.