தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி.. அமித் ஷா வகுத்த வியூகம் சக்ஸஸ்.. பணிந்தாரா இபிஎஸ்?
வருகிற சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என திமுக கூட்டணியில் விசிக கேட்டு வரும் நிலையில், கூட்டணி ஆட்சிதான் அமைப்போம் என அதிமுக கூட்டணி வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் நடக்கும் என்றும் அதற்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை தாங்குவார் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். வருகிற தேர்தலில், இந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என திமுக கூட்டணியில் விசிக கேட்டு வரும் நிலையில், கூட்டணி ஆட்சிதான் அமைப்போம் என அதிமுக கூட்டணி வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலையை கச்சிதமாக முடித்த அமித் ஷா:
தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள், எவ்வளவு செல்வாக்கு படைத்த கட்சிகளாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளின் உதவியில்தான் வெற்றி பெற்று வருகின்றன. தமிழக அரசியலில் கூட்டணி என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி எவ்வளவு முக்கியமாக இருந்தாலும், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக, அதிமுக கட்சிகள் வாய்ப்பு தராமலே இருந்து வந்தது. கடந்த 2006ஆம் ஆண்டு, திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட, கூட்டணி ஆட்சிக்கு அன்றைய முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி, வெளியில் இருந்து ஆதரவு தர, 5 ஆண்டுகளுக்கு மைனாரிட்டி ஆட்சியைதான் திமுக நடத்தியது.
முதல்முறையாக கூட்டணி ஆட்சி:
இந்த நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான அதே நாளில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் நடக்கும் என்றும் அதற்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை தாங்குவார் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து விரிவாக பேசிய அமித் ஷா, "இணைந்துதான் ஆட்சி அமைக்க போகிறோம். கூட்டணி ஆட்சிதான் நடக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது. வெற்றிக்கு பிறகு மற்றவை முடிவு செய்யப்படும்" என்றார்.
இதன்மூலம், அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், இந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்தாண்டு, சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தது போல், தமிழ்நாட்டில் அதே வியூகத்தை கடைபிடித்து கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
மாறுகிறதா அரசியல் களம்?
கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே இதுகுறித்து பாஜக மேலிடம் அதிமுக தலைவர்களுடன் கறாராக பேசியதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என பாஜக தரப்பு எடப்பாடி பழனிசாமியிடம் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என திமுக கூட்டணியில் விசிக தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால், அதற்கு திமுக தலைமை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த சூழலில், கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தவெகவின் முதல் மாநாட்டிலேயே கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த அக்கட்சியின் தலைவர் விஜய், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளை சேர்த்து கொள்வது குறித்து பேசினார்.




















