Yercaud: "ஏற்காட்டில் மண் சரிவு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு; எச்சரிக்கை" - அமைச்சர் ராஜேந்திரன்
பருவமழையால் சேலம் மாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆலோசனை.
பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் காய்ச்சல் பாதிப்புகளும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் புதிதாக காய்ச்சல் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சேலம் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காய்ச்சல் பிரிவினை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, அரசு மருத்துவமனை டீன் தேவி மீனாள் இடம் கேட்டறிந்தார். காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அமைச்சர் ராஜேந்திரன் உடல் நலம் குறித்து விசாரித்தார். பொதுமக்களிடம் கனிவாக சேவையாற்றுமாறு, செவிலியரை அமைச்சர் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளையும் அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரப்பர் படகுகள், மரங்கள் கீழே விழும் போது அகற்றுவதற்கான உபகரணங்கள் குறித்து தீயணைப்புத் துறையினர் விளக்கினர்.
தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், "வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வாக இருக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் வடகிழக்குப் பருவமழை குறித்து தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளார். விரிவான ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் உரிய கவனத்தோடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துப்பட்டுள்ளது. அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழையால் சேலம் மாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் அமைக்கும் பணி, கழிவு நீர் வாய்க்கால் சீரமைப்பு, மின்சார கம்பங்கள் சீரமைக்கும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும். மழையின் போது சாலையில் ஏற்படும் பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உடனடியாக சீர் செய்ய வேண்டும். மின்வழித்தடங்களில், மரக்கிளைகள் உரசாத வகையில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக்கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுகாதாரத்துறையினர். மருத்துவமுகாம்களை நடத்திட வேண்டும். தேவையான மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் குளம், குட்டைகளுக்கு செல்லாத வகையில் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். உரிய எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் குளோரினேசன் செய்வதை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும்.
ஏற்காடு மலைப்பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. பருவமழையின் போது மண் சரிவு , நிலச்சரிவு ஏற்பட சூழல் இருப்பதால் உரிய எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.
இக்கூட்டத்தில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.