‛கடிதம் எழுதி லெட்டர் பேட் தேய்ந்தது தான் மிச்சம்...’ அதிமுகவை சாடும் நடிகர் குண்டு கல்யாணம்!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாரம் இரண்டுமுறை இதற்காக சென்று டயாலிசிஸ் செய்து வருகிறேன். டயாலிசிஸுக்கான செலவு பொதுவாகவே அதிகம் என்பதால் பொருளாதார நெருக்கடியால் அதனை சமாளிக்க முடியாமல் உள்ளேன்
எதிர்கட்சியான அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராகப் பதவி வகிப்பவர் நடிகர் குண்டு கல்யாணம். இவர் தற்போது சீறுநீரகப் பிரச்னையால் அவதிப் படுவதாகவும் அதற்கான சிகிச்சை எடுக்கக் கூடப் பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதற்கிடையே பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘அதிமுகவில் நான் மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தொண்டனாக இருந்து வருகிறேன். அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே நான் அவரது தீவிர விசுவாசி. அதன்பிறகு நான் கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளராகப் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். கட்சியில் ஐம்பது வருடங்களாக இருந்து வருகிறேன். கட்சிக்காக நான் ஏறாத மேடையில்லை. ஆனால் தற்போது வயது காரணமாக சீறுநீரகக் கோளாறால் அவதிப்படுகிறேன்.
இதற்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாரம் இரண்டுமுறை இதற்காக்ச் சென்று டயாலிசிஸ் செய்து வருகிறேன். டயாலிசிஸுக்கான செலவு பொதுவாகவே அதிகம் என்பதால் பொருளாதார நெருக்கடியால் அதனை சமாளிக்க முடியாத சூழலில் உள்ளேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கும் பல லட்சம் ரூபாய் செலவாகும். அதற்கான பொருளாதாரம் என்னிடம் இல்லை. என் மகள்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறார்.அவரிடமும் இதற்கான பணவசதி இல்லை. பொருளுதவி கேட்டு நானும் தலைமைக்கு நிறையவே கடிதம் எழுதிவிட்டேன்.ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. எழுதி எழுதி எனது லெட்டர்பேட் தேய்ந்ததுதான் மிச்சம். எனது குரலைக் கட்சியினர் யாரும் செவிகொடுத்துக் கேட்கவில்லை. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அவ்வப்போது பொருளுதவி செய்து வந்தார். அவர் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. 50 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்த நபரை ஒதுக்கிவிட்டனர். ஒருவேளை மறைந்த தலைவர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கட்சியின் விசுவாசியான எனக்கு உடனடியாக உதவியிருப்பார்’ என மன வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.
உள்கட்சி அதிகார மோதலில் இருக்கும் அதிமுகவினர் கட்சி சண்டையில் உறுப்பினர்களுக்கு பாராமுகம் செலுத்தி வருகிறார்களா என்கிற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
முன்னதாக, சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினருக்கு இடையே தொடர்ந்து அதிமுகவில் அதிகார மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியாகப் பதவியேற்ற பின், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா தனது தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்த ஆடியோக்கள் வெளியிடப்பட்டன. தேர்தலுக்கு முன்பு, அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்த சசிகலா இவ்வாறு ஆடியோக்கள் வெளியிடுவதன் பின்னணியில் அதிமுகவைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 16 அன்று, அதிமுகவின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அதிமுகவைக் கைப்பற்றும் தனது எண்ணத்தைத் தனது தொண்டர்களிடம் வெளிப்படுத்திய சசிகலாவுக்கு, அவரது தி நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை அவரது தொண்டர்கள் வழிநெடுக வரவேற்பு அளித்தனர். மேலும், சசிகலா இந்தப் பயணத்திற்கு ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடியைக் கட்டியவாறு பயன்படுத்தி இருந்ததும் அதிமுகவின் மூத்த புள்ளிகளைக் கோபமூட்டியது குறிப்பிடத்தக்கது.