“வெட்கக்கேடானது; தமிழகத்தில் இப்படி ஒரு நிலை” - தமிழக அரசை மாறி மாறி வசைபாடிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
இதனிடையே கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “மருத்துவர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. உயிரை காக்கும் சேவை செய்யும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. மருத்துவமனைக்கு ஒருவர் ஆயுதத்தோடு வந்துள்ளார். மருத்துவரை தாக்கிய நபர் ஆயுதத்துடன் எப்படி மருத்துவமனைக்குள் நுழைந்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு கிடக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கருணாநிதியின் பெயரை வைப்பது மட்டும்தான் ஸ்டாலின் வேலையா?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் “மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது. மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர் மீது திட்டமிட்ட கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே திருத்தி இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த அதிமுக அட்சியில் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை. வழக்கறிஞர்கள் மருத்துவர்கள் என அனைத்து தரப்பினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஆயுதத்தை எடுத்துவந்து கதவை மூடி திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தமிழக அரசின் கடைமை” என குறிப்பிட்டார்.
முன்னதாக சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு கத்தியோடு வந்த நபர் ஒருவர் கதவை சாத்திவிட்டு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பித்து ஓடிய அவரை மருத்துவமனை ஊழியர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மருத்துவருக்கு 7 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இதனிடையே கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ சங்கங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளநிலையில் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. மருத்துவர் மீது தக்குதல் நடத்திய நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.