ADMK Manaadu EPS: அதிமுக மாநாடு.. ஈபிஎஸ் தலைமையில் குவிந்த தொண்டர்கள், விழாக்கோலம் பூண்ட மதுரை.. தயார் நிலையில் ஹெலிகாப்டர்
அதிமுக மாநாடு அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அதிமுக மாநாடு அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மதுரையில் நடைபெற உள்ளது.
மாநாடு பணிகள் தீவிரம்:
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றபின் அக்கட்சியின், மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக வலையங்குளம் அருகே ரிங்ரோடு பகுதியில் பரந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, அதை சீர்படுத்தி பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அங்கு சென்று அந்த பணிகளை மேற்பார்வை செய்தனர். எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் அங்கேயே தங்கியிருந்த இப்பகுதிகளை மேற்கொண்டதாகவும், எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.
பிரமாண்ட முகப்பு:
மாநாடு நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகப்பானது கோட்டை போன்றும், அதில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ அமைப்புகளும் இடம்பெற்றுள்ளனர். அதற்கு கீழே எடப்பாடி பழனிசாமி படம் வைக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதற்கான இருக்கைகள் போடப்பட்டன. மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் பணிகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளன.
குவிந்த தொண்டர்கள்:
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் நேற்று காலை முதலே மதுரைக்கு வர தொடங்கினர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் இருந்து அ.திமு.க. தொண்டர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு ரயில் நேற்று காலை மதுரை சென்றது. அந்த ரயில் கூடல்புதூர் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து உற்சாகமாக இறங்கிய தொண்டர்கள் பின்னர், தங்கும் விடுதிகளுக்கு சென்றனர். தொண்டர்களின் படையெடுப்பால், மதுரை நகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மண்டபங்கள் நிரம்பி வழிகின்றன. லட்சக்கணக்கில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்களுக்கு, கட்சி சார்பில் இன்று சைவ விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதியில் போர்டபிள் செல்போன் டவரும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடல் விவரம்:
மாநாட்டு திடல், 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் 3 வேளையும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சைவ உணவு பரிமாறப்படுகிறது. அதற்காக 150-க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவு தயாரிக்கும் பணியில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். காய்கறிகள் நறுக்கும் பணி, விதவிதமான உணவுகள் சமைக்கும் பணி என தீவிரமாக நடைபெற்று வருகிறது. உணவு வழங்கப்படும் பந்தலில் நெரிசல் இன்றி தொண்டர்களுக்கு பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும் போதிய ஆட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வரவேற்பு ஏற்பாடு:
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8.45 மணிக்கு, அதிமுக தொடங்கி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக சுமார் 51 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, எடப்பாடி பழனிசாமி மாநாட்டு பந்தலுக்கு வரும்போது உயரத்தில் இருந்து பூக்கள் தூவுவதற்காக, ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மாநாட்டு திடல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கொடியேற்றுதலுக்கு பிறகு ஜெயலலிதா பேரவை சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு, 3 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுத்து வந்து மரியாதை அளித்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.
கலைநிகழ்ச்சிகள்:
பின்னர், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த கண்காட்சி அரங்கத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த விளக்க படங்களும், முக்கிய திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளன. மாநாட்டு திடலில், கலை நிகழ்ச்சிகள், கவியரங்குகள் என தொடர்ந்து நடக்கின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு உரை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
ஈபிஎஸ் தலைமை உரை:
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர். செல்லூர் ராஜூ உள்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசுகின்றனர். மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு தலைமை உரை நிகழ்த்துகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கால திட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அவர் பேசுகிறார். அதன்பின் நன்றியுரையுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.