கல்வெட்டில் பெயர் செதுக்கி வைத்துவிட்டால் பொதுச்செயலாளரா? ஜெயக்குமார் ஆவேசம்
எந்த பெயரில் வந்தாலும், தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் இந்த கொல்லை கும்பலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா தியாகத் தலைவி’ என்கிற பட்டத்திற்கு பதில், ‛புரட்சித் தாய்’ என்கிற பட்டத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளார். கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்யவில்லை என்பது அவருக்கே தெரிந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அதிமுக பொன்விழா ஆண்டாக தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை பொன்விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதே சமயம், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சசிகலா கலந்து கொண்டார். அங்கு, ‘கழக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்," ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தலைமை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கிட்டத்தட்ட பெங்களூர் சிறையில் இருந்து அவர் வெளியே வந்து எட்டு மாதங்கள் ஆகிறது. கல்வெட்டு வைத்துவிட்டால் பொதுச் செயலாளராக மாறி விட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், " இந்த எட்டு மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் அம்மாவின் நினைவிடத்திற்கோ, புரட்சித் தலைவர் அண்ணாவின் நினைவிடத்திற்கோ, அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கோ வருகை தந்து மரியாதை செலுத்தியிருப்பாரா? இதே பொன்விழா கொண்டாடாட்டம், அடுத்தாண்டு நடைபெற்றிருந்தால் அடுத்த வருடம் தான் அவர்கள் மரியாதை செலுத்த வந்திருப்பார்கள். இந்த பொன்விழா இத்தகைய ஒற்றுமையோடும், எழுச்சியோடும் நடைபெற்று வருவது அவர்களுக்கு பொறுக்கவில்லை" என்று தெரிவித்தார்.
"சசிகலா குடும்பம் சார்ந்தவர்களால் தான் 1996 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக என்ற மாபெரும் இயக்கமே தோல்வியுற்றது. சசிகலா குடும்பத்தாரின் பொருளாதாரம் முன்னேற வேண்டும், வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் ஆஇஅதிமுக கட்சிக்காரர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். கட்சிக்காரர்கள் யாரும் இதை மறந்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் தான் புரட்சித் தலைவர். அம்மா ஜெயலலிதா தான் புரட்சித் தலைவி. சசிகலா அவர்கள் என்ன புரட்சி செய்தார்கள். அவர்களின் குடும்பத்தினரை வாழவைத்தது தான் அவர்கள் செய்த பெரும் புரட்சி. தற்போது, சசிகலா தியாகத் தலைவி’ என்கிற பட்டத்திற்கு பதில், ‛புரட்சித் தாய்’ என்கிற பட்டத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளார். கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்யவில்லை என்பது அவருக்கே தெரிந்துள்ளது . எந்த பெயரில் வந்தாலும், தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் இந்த கொல்லை கும்பல்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, ஜெ., மறைவுக்குப் பின் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றார். இதற்கிடையில் அதிமுகவின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி-ஓபிஎஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர், செயல்படுகின்றனர். இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, அதிமுகவை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. அவர் எதிர்பார்த்த ஆதரவு கட்சியில் கிடைக்காததால் தேர்தல் சமையத்தில் ஒதுங்கியிருப்பதாக அறிக்கை விட்டார் சசிகலா. தேர்தல் நிறைவுபெற்று, அதிமுக தோல்வியை தழுவிய பின் மீண்டும் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய சசிகலா பல்வேறு முயற்சிகளை முன்வைத்தார். ஆடியோ வெளியீடு, தொண்டர்கள் சந்திப்பு என அவர் செய்த அத்தனை முயற்சியும் அதிமுகவை கைப்பற்ற பலனளிக்கவில்லை. இந்நிலையில் அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாட அதிமுக தலைமை முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியது. அதே நேரத்தில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் தனது காய் நகர்த்தும் பணியை முன்னெடுக்க தயாரானார் சசிகலா. தோல்வியை காரணம் காட்டி தொண்டர்களை அரவணைக்கலாம் என்பது அவரது திட்டம்.
அதற்காக இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தச் செல்கிறார் சசிகலா. சிறைக்கு சென்று சசிகலா திரும்பிய போது, அப்போது ஆளும் அரசாக இருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, நினைவிடத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சசிகலா அங்கு செல்ல முடியாமல் தவித்தார். தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் முறையான அனுமதி பெற்று, இன்று மெரினா செல்கிறார் சசிகலா. தனக்கு அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பு வழங்கவும் முன்பு போலீசாரிடம் சசிகலா தரப்பில் மனுவும் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், வாசிக்க:
காஞ்சிபுரம் : அதிமுக பொன்விழா ஆண்டு : இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினர்..