ADR report: பாலியல் வன்கொடுமை..பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 151 எம்.பி., எம்எல்ஏக்கள்: பாஜகவில் அதிகம்- ஏடிஆர் அறிக்கை!
ADR report: தற்போது எம்.பி., எம்எல்ஏக்களாக இருக்கும் 151 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 151 எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களின் பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இதில், 16 பேர் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் உள்ளதாக ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) அரசியலர்கள், கட்சிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவ்வப்போது அறிக்கை வழங்கி வருகிறது. இதற்காக 2019 முதல் 2024 வரை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தவர்களை எடுத்துக் கொண்டது. அதில், தற்போதைய எம்.பி., எம்எல்ஏக்கள் 4,809 பேரில், 4,693 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் ஆய்வு செய்தது. அதன் முடிவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:
பாலியல் வன்கொடுமை வழக்குகளும் அடக்கம்
’’தற்போது எம்.பி., எம்எல்ஏக்களாக இருக்கும் 151 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அரசியலர்கள் மீது அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 135 எம்எல்ஏக்கள் மற்றும் 16 எம்.பி.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மேற்கு வங்கத்தில் 25 எம்.பி., எம்எல்ஏக்கள், ஆந்திராவில் 21, ஒடிசாவில் 17 பேர் மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக 2 எம்.பி.க்கள், 14 எம்எல்ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு, ஐபிசி பிரிவு 376-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவில்தான் அதிகம்
பெண்களுக்கு எதிராக குற்றத்தைச் செய்த புகாருக்கு ஆளாகி, வழக்குகளைச் சந்திப்பவர்களில் பாஜகவைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்களே அதிகம். பாஜகவினர் 54 பேர் இதில் உள்ளனர். அடுத்தபடியாக காங்கிரஸில் 23 எம்.பி., எம்எல்ஏக்கள், தெலுங்கு தேசம் கட்சியில் 17 எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேபோல பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பாஜக மற்றும் காங்கிரஸில் இருந்து தலா 5 பேர் உள்ளனர்.
என்னதான் தீர்வு?
அரசியல் கட்சிகள், குற்றப் பின்னணி கொண்ட குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை புகார்களுக்கு உள்ளானவர்களுக்கு சீட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். காவல்துறை இந்த வழக்குகளை முறையாகவும் தீர விசாரித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கும் பொறுப்பு
அதேபோல இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வாக்காளர்களுக்கு வாக்களிப்பதை மக்களும் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது.