உங்க கற்பனை! அவங்க கோபமா போகல.. வேலை இருந்துச்சு.. ஒருவொரு வார்த்தையில் பதிலளித்த பொன்னையன்!
ஓபிஎஸ் இபிஎஸ் நகமும் சதையும் போல உள்ளதாக அதிமுகவின் பொன்னையன் தெரிவித்துள்ளார்
அதிமுகவில் இரட்டை தலைமையாக உள்ள ஓபிஎஸ்-இபிஎஸ் இரட்டைத் தலைமையை, ஒற்றைத் தலைமையாக மாற்றக் கோரி, அதிகாரப்பூர்வ கோரிக்கை எழுந்த நிலையில், அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பொறுப்பு நிரப்பப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதை யார் கைப்பற்றப் போகிறார் என்பதில் தான் சஸ்பென்ஸ் நீடிக்கும் நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் விட்டுக் கொடுத்து வந்த ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள், இந்த முறை, எகிறி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் மிக அமைதியாக இருக்கிறார்கள். இதிலிருந்து யார் காய் நகர்த்துகிறார்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒரளவிற்கு கணிக்க முடிகிறது. இந்த போட்டியெல்லம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல ஒன்றாகவே இருப்பதாக அதிமுகவின் பொன்னையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்னையன் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், ஒற்றைத்தலைமை குறித்த கேள்வியே தேவையற்ற ஒன்று. அந்த முடிவை பொதுக்குழு முடிவு செய்யும். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்கும். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை குறித்து பேச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஜோசியம் சொல்ல முடியாது என்று பதிலளித்தார் பொன்னையன்.
மேலும் பேசிய அவர், இங்கு யாரும் தனித்தனியாக செயல்படவில்லை. ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல ஒன்றாகவே உள்ளனர். கூட்டத்தில் இருந்து யாரும் கோபமாக வெளியேறவில்லை. அதெல்லாம் உங்கள் கற்பனை. சிவி சண்முகம் திருச்சி செல்லவேண்டுமென்பதால் கிளம்பினார். ஜெயக்குமார் ஒரு மீட்டிங்கில் இருந்து வந்தார். மீண்டும் கிளம்பி சென்றார். இரட்டைத்தலைமை தொடருமா என்பதே தேவையற்ற கேள்வி என்றார்.
ஒற்றைத் தலைமை இப்போது சாத்தியமா ? – அதிமுக விதிகள் சொல்வது என்ன ?
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதற்கான ஒப்புதலை வரும் 23 ஆம் தேதி வாங்க வேண்டியிருக்கிறது. அதோடு, ஒற்றைத் தலைமை உருவாக்க வேண்டுமென்றால், ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் மட்டுமே ஒற்றைத் தலைமை உருவாக்கம் என்பது சாத்தியப்படும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்