OPS General Secretary Meeting: “நாற்காலியை திருப்பி ஒப்படைத்த உத்தமர் ஓபிஎஸ்; ஆனால் ஈபிஎஸ்..” - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மருது அழகுராஜ் சரவெடிப் பேச்சு..
நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் நாற்காலியை வழங்கியவர்களிடமே உரிய நேரத்தில் ஒப்படைத்த உத்தமர் ஓபிஎஸ்- மருது அழகராஜ்
இயக்கத்தில் ஒளிய வந்த திருடன் இயக்கத்தை அபகரிக்க பார்க்கிறார்; நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் நாற்காலியை வழங்கியவர்களிடமே உரிய நேரத்தில் ஒப்படைத்த உத்தமர் ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மருது அழகராஜ் பேசியுள்ளார்.
கட்சிக்குள் தனது பலத்தை வலுப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்குள் ஆதரவு திரட்டுவது, நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எதிர்கொள்வது மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது.
கட்சியின் அதிருப்தியாளர்கள், எடப்பாடி தரப்பால் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோரை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என ஓ. பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். இவர்களே இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்த பின்பாக கடந்த ஜூலை நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக வந்த நிலையில், இரு நீதிபதிகள் பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் வழக்கு ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் கட்சிக்குள் தனது ஆதரவை திரட்டவும், தனது பலத்தை வலுப்படுத்தவே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பன்ருட்டி ராமசந்திரன் “எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் அனைவரும் இங்கு கூறியுள்ளனர்; எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசி இங்குள்ளவர்களுக்கு தான் உண்டு. இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்" என கூறினார்.
மற்றொரு புறம் எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.