Jayakumar blamed sasikala: "ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லாமல் தடுத்தது பவர் செண்டர்தான்"; போட்டுடைக்கும் ஜெயக்குமார்
மருத்துவமனையில் 10 அறைகள் எடுத்து, அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா உறவினர்கள் மட்டுமே எடுத்து தங்கினர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொண்டு வந்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையில், சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர, வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது. இதையடுத்து, நான்கு பேர் மீதும் விசாரணை செய்ய ஆணையம் பரிந்துரைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தலையீடு இல்லை என சசிகலா தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜெயக்குமார் பதிலளித்து பேசியதாவது,
ஜெயக்குமார் பதில்:
- மருத்துவமனையில் 10 அறைகள் எடுத்து, அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா உறவினர்கள் மட்டுமே எடுத்து தங்கினர்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அப்போது பாராசிட்டாமல் மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் மருத்துவமனையில், மருத்துவர் சிவகுமார் அனுமதிக்கவில்லை.
- மேலும், ஏன் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லவில்லை, இது எல்லாம் சந்தேகப்படும்படியாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, இதை யார் தடுத்தது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பவர் சென்டர்தான் என ஜெயக்குமார் பதிலளித்தார்.
இது எல்லாம் நானாக சொல்லவில்லை, அறிக்கையில் படித்ததை வைத்து சொல்கிறேன். மேலும் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என பார்ப்போம். பின்னர், அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக பேசிய ஜெயக்குமார்,
சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதை கண்டித்தும், தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் எனவும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இபிஎஸ் தரப்பு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் தெரிவித்ததாவது,
திமுக சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. எங்கள் ஆட்சியில் போராட அனுமதி வழங்கினோம். ஆனால், இப்போது உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சட்ட விரோதமா?. காவல்துறையினர் ஆடு, மாடுகளை போல் வண்டியில் ஏற்றினர். என் கை எல்லாம் காயமாகி போய்விட்டது.
பேரவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கவில்லை. மேலும் அவையை, பேரவை தலைவர் மாண்புடன் நடத்தவில்லை. இப்போது, சட்டமன்றம் திமுகவின் அறிவாலயமாகி போய்விட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.