நடிகர் விவேக் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன விஜய்
ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய், மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜனங்களின் கலைஞன், சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் கலைமாமணி விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி காலமானார். கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்த அவர், மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 16ம் தேதி காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இருதயத்தில் 100 சதவிகித அடைப்புடன் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு ஆஞ்சியோ உள்ளிட்ட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் இறுதியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் ஏப்ரல் 17ம் தேதி காலை 4.35 மணியளவில் பிரிந்தது. விவேக் மாரடைப்பு காரணமாகத்தான் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏப்ரல் 15ம் தேதி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் அவர் ஏப்ரல் 17ம் தேதி உயிரிழந்தார். அதனால் அவர் தடுப்பூசி எடுத்ததால் தான் உயிரிழந்தார் என்ற புரளிகள் வெளியான நிலையில், நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மட்டுமே உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விவேக்கின் மரணத்திற்கு திரைபிரபலங்கள் மட்டுமின்றி பலரும் தங்களுடைய இரங்கல்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். பலர் அவருடைய உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் விஜய், தனுஷ் போன்ற நடிகர்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்ததால் நேரில்வர இயலாத நிலையில் இருந்தனர். இந்நிலையில் ஜார்ஜியா நாட்டில் தளபதி 65 படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பிய நிலையில் விவேகின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது இரங்கலை கூறினார்.
நடிகர் விவேக் விஜயுடன் நேருக்கு நேர், பிரியமானவளே, ஷாஜகான், யூத் தொடங்கி பிகில் திரைப்படம் வரை பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.