KPY Bala: “ஏங்க, நான் சர்வதேச கைக்கூலி எல்லாம் இல்லைங்க, வெறும் தினக்கூலி“ - நடிகர் பாலாவின் விளக்கம் என்ன.?
நடிகர் பாலா செய்துவரும் உதவிகள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தான் ஒரு சர்வதேச கைக்கூலி அல்ல, வெறும் தினக்கூலி தான் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

சின்னத்திரை கலைஞனாக இருந்த நடிகர் KPY பாலா சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்தார். பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் தான் அது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், பாலா செய்துவரும் சமூக சேவைகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவற்றை அவர் எப்படி செய்கிறார்.? எங்கிருந்து பணம் வருகிறது என்பதுபோல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு விளக்கமளித்துள்ளார் பாலா.
“நான் சர்வதேச கைக்கூலி அல்ல, வெறும் தினக்கூலி தான்“
சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பாலா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அந்த வீடியோ வைரலானது. அதைத் தொடர்ந்து, பலரும் நடிகர் பாலாவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு விளக்கமளித்துள்ள KPY பாலா, தன்னை சர்வதேச கைக்கூலி என்று கூறுவது தனக்கே அதிர்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் வண்டி வங்கித் தரும்போது, அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாகத் தான் அந்த வண்டியின் நம்பரை மறைத்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
தான் செய்த உதவிகளுக்கு எல்லாம் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள பாலா, தான் செய்த நிகழ்ச்சிகள், ப்ரமோஷன்கள், படங்களில் இருந்து வரும் வருமானம் என அவற்றை வைத்துதான் உதவிகளை செய்வதாக விளக்கமளித்துள்ளார்.
மேலும், தான் கட்டி வருவது மருத்துவமனை அல்ல என்றும், அது ஒரு சின்ன கிளினிக் மட்டும் தான் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த கிளினிக் கூட, தான் வீடு கட்ட வைத்திருந்த நிலத்தில் தான் கட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாலாவுக்கு பக்கபலமாக இருக்கும் பிரபலங்கள், உதவி செய்யும் ஒருவரின் குணத்தை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை, அவரை இப்படி குறை கூறுவது அதிர்ச்சியாக உள்ளது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பத்திரிகையாளர் கூறியது என்ன.?
நடிகர் கேபிஒய் பாலா, மக்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதோடு, நடிகர் ராகவா லாரன்ஸின் இயக்கம் மூலமாகவும் பல உதவிகளை செய்து வருகிறார். முடியாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வாங்கிக் கொடுத்தது என, இவர் செய்த பல விஷயங்கள் வைரலாகி வந்தன. இந்நிலையில், பாலாவை சர்வதேச கைக்கூலி என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில், பத்திரிகையாளர் ஒருவர், பாலா கொடுத்த ஆம்புலன்ஸ் நம்பரும் பொய்யாக இருப்பதாகவும், அவர் பித்தலாட்டம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டி, விமர்சனங்களை முன்வைத்தார். அவரது அந்த பேட்டி வைரலான நிலையில், பலரது பணத்தை வைத்து தான் பாலா இப்படி உதவிகளை செய்து தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வீடியோ வைரலாகி, பலரும் பாலாவை விமர்சிக்கத் தொடங்கிய நிலையில் தான், அவரே தற்போது விளக்கமளித்துள்ளார்.





















