TN Rain Alert: வளிமண்டலத்தில் நிலவும் காற்று மாறுபாடு.. 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெயில் எப்படி இருக்கும்?
வளிமண்டலத்தில் காற்று மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.1 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 33.1 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.