TN Rain Alert: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12.08.2023 முதல் 15.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
09.08.2023 மற்றும் 10.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
10.08.2023: `தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):
காரைக்கால் 55.0, திருச்சிராப்பள்ளி 42.0, மதுரை 42.0, நாகப்பட்டினம் 26.0, சேலம் 14.0கடலூர் 12.0, புதுச்சேரி 6.0, சிதம்பரம் - கடலூர் 45.0, விருதுநகர் 12.5, சிருகாமணி (திருச்சிராப்பள்ளி) 62.0, விருத்தாசலம் (கடலூர்) 5.5, ராமநாதபுரம் 5.5, விரிஞ்சிபுரம் (வேலூர்) 4.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை இருந்தாலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் 37.4 டிகிரி செல்சியச் வெப்பநிலை பதிவானது. அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை பகல் நேரங்களில் இயல்பை விட 2 முத 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.