TN Rain Alert: இன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை? வானிலை நிலவரம் இதோ..
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரியில், கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை இருந்தாலும் அதே சமயம் வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
07.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
07.05.2023 மற்றும் 08.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
07.05.2023 முதல் 10.05.2023 வரை: 07.05.2023 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். காற்றின் வேகம் சற்றே உயர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 08.05.2023 இரவிலிருந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். காற்றின் வேகம் மேலும் உயர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 10.05.2023 முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில், ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 07.05.2023 தேதிக்குள் (இன்று) கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.