ABP NADU Exclusive: காணாமல் போன முதியவர்! கருமாதி செய்த உறவினர்கள்! - மீட்டு ஒப்படைத்த இளைஞர்கள்!'
காணாமல் போன முதியவரை 6- ஆண்டுகள் கழித்து அவருடைய உறவினர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள் வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை இளைஞர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் வந்தவாசி நகராட்சி பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார் . இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் சீனிவாசா நகர் பகுதியில் மயக்கமான நிலையில் உள்ளதாக அன்பால் அறம் செய்வோம் என்ற தொண்டு அறக்கட்டளை நிறுவனர் அசாருதீன் என்பவருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தகவல் அளித்தனர். இந்த தகவல் அறிந்த அசாருதீன் அவருடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு சீனிவாசா நகர் பகுதியில் மயக்கமான நிலையில் இருந்த முதியவரை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அதன் பின்னர் முதியவரை வந்தவாசி தெற்கு காவல் நிலைய துணை உதவியாளர் விநாயகமூர்த்தியிடம் பரிந்துரைக் கடிதம் ஒன்றை பெற்று முதியவரை ஆரணி பகுதியில் உள்ள அண்ணாமலையார் முதியோர் காப்பகத்தில் அழைத்துச் சென்று விட்டனர்.
மேலும் மயக்கமான நிலையில் காணப்பட்ட முதியவர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தார். அப்போது அவரிடம் அசாருதீன் மெல்லமாக பேச்சுக் கொடுத்து அவரின் பெயரையும் கேட்ட அப்போது அவருடைய பெயர் நடராஜன் என்றும் தனக்கு 60 வயது ஆகின்றது என்றும் கூறினார். மேலும் தன்னுடைய சொந்த ஊர் ஆரணி தாலுக்கா பாலனதாங்கள் கிராமத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அவர்கள் அவர்களுடைய குடும்பத்திற்கு தகவல் அளித்து முயவரை அழைத்து சென்று அவருடைய குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.
ABP NADU குழுமத்தில் இருந்து அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிறுவனர் அசாருதீனிடம் பேசுகையில்;
,"கடந்த 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தொலைபேசியில் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது வந்தவாசி சீனிவாசா நகர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மயக்கமான நிலையில் உள்ளாரென்று. அதன் பின்னர் நானும் என்னுடைய அமைப்பை சேர்ந்த நண்பர்களும் இணைந்து அங்கு சென்று பார்தபோது பல நாட்களாக முதியவர் சாப்பிடாமல் இருந்ததால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். மயக்கமான நிலையில் இருந்த முதியவரை மீட்டு அவருக்கு உணவு மற்றும் உடை அனைத்தையும் அளித்தோம்.பின்னர் அவரை வந்தவாசி தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காப்பகத்தில் சேர்ப்பதற்காக காவல் நிலைய துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தியிடம் பரிந்துரை கடிதம் பெற்று ஆரணி பகுதியில் உள்ள அண்ணாமலையார் முதியோர் காப்பகத்தில் சேர்த்தோம்.
அதன் பிறகு 3 நாட்கள் கழித்து காப்பகத்தில் சேர்த்த முதியோர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தோம் பின்பு அவரிடம் வீட்டு முகவரி தெரியுமா என்று கேட்டோம். ஆனால் அவர்,'எனக்கு ஞாபகம் இல்லை' என்றார். சிறிது நேரம் கழத்து 'எனக்கு உறவினர்கள் உள்ளனர் பாலவனதாங்கள் கிராமத்தில் என்னுடைய அண்ணன் உள்ளார்' என்று தெரிவித்தார். அதன்பிறகு நாங்கள், அந்த கிராமத்திற்கு சென்று முதியவரின் அண்ணணை கண்டுபிடித்து நடராஜன் முதியவரைப் பற்றி தெரிவித்தோம். அவர்கள் அனைவரும் கண்ணீர் மல்க அழுத நடராஜன் காணமல் போகி 6 வருடங்களுக்கு மேல் ஆகிறது அவரை நாங்கள் தேடாத இடமே இல்லை பிறகு அவர் இறந்து விட்டார் என்று எண்ணி அவருக்கு நாங்கள் கருமாதி செய்து விட்டோம் என்று கூறினார்கள். ஆனால் முதியவர் உயிருடன் உள்ளார் என்று கூறி முதியவரின் உறவினர்களை முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்று முதியவர் நடராஜனை காண்பித்து அவர்களுடன் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தோம்" என்றார்.
இது குறித்து முதியவரின் உறிவனர் தாமோதிரனிடம் பேசுகையில், "நடராஜன் என்னுடைய மாமா தான். அவருக்கு திருமணமாகி குழந்தைகள் ஏதும் இல்லாதா நிலையில், சில வருடங்களிலேயே அவருடைய மனைவி இறந்து விட்டார். பின்னர் நடராஜன் தனிமையில் தான் வாழ்ந்து வந்தார். சில வருங்கள் எங்களுடைய வீடு மற்றும் அவருடைய அண்ணன் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆடு மேய்பதற்கு சென்றவர் வீடு திரும்பவேயில்லை. அவர் காணாமல் போய்விட்டார் என்று எண்ணி அவரை தேடினோம் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை என்பதால் இறந்தபோயிருப்பார் என்று எண்ணி அவருக்கு கருமாதி செய்து விட்டோம். பிறகு நேற்று இரண்டு வாலிபர்கள் வந்து எங்களுடைய மாமா உயிருடன் இருப்பதாக தெரிவித்தார்கள் நாங்கள் அவர்களுடன் சென்று மாமாவை அழைத்து வந்தோம்" என்றார்.முதியவர் நடராஜன் இறந்து போன தாக எண்ணிய உறவினர்களிடம் 'அறம் செய்வோம் தொண்டு அறக்கட்டளை'யினர் 6-வருடங்களுக்கு பிறகு உறவினர்களிடம் கொண்டுபோய் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது