(Source: Poll of Polls)
ABP C Voter Opinion Poll: தமிழ்நாடு- கேரளாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு - ABP- சி வோட்டர் கணிப்பு முடிவுகள் வெளியானது
ABP C Voter Poll: தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நடைபெற்றாலும், முதலிடத்தைப் பெறப்போகும் அணி யார் என்பதில் வாக்காளர்கள் தெளிவாக உள்ளனர். இது தொடர்பான முடிகள், கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ளன.
ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின் முதற்கட்டம் வெளியாகியுள்ளது. இதில், தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணி அபார வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தல்:
இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கேரள மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும்.
ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 3 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தற்போது 4வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன.
இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. முதலில் வெளியாகியுள்ள தமிழ்நாடு, கேரளா குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தற்போது பார்ப்போம்.
தமிழ்நாடு:
தமிழ்நாடு மாநிலத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியானது 51.8 சதவிகிதம் வாக்குகள் பெற்று பிரம்மாண்ட வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக, அதிமுக கூட்டணி 23 சதவிகித வாக்குகளையும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 19 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதர கட்சிகள் 6.2 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதைத் தொகுதிகளில் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், அனைத்திலும் திமுக கூட்டணியே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. திமுக+ 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றியை பெறு வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கேரளா:
கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி 43. 4 சதவிகித வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெறும் என வாக்காளர்கள் கணித்துள்ளனர்.
அடுத்தப்படியாக, இடதுசாரிகளின் LDF கூட்டணி 30.9 சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக அங்கம் வகிக்கும் NDA கூட்டணி 21.2 சதவிகித வாக்குகளை பெற்று, 3-ம் இடத்தில் மட்டுமே வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணியே மகத்தான வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 16 தொகுதிகளிலும் அதன் கேரள மாநில கூட்டணியான UDF-வில் உள்ள கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் UPA மற்றும் LDF தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஆனால், அகில இந்திய அளவில் UPA மற்றும் LDF ஆகியவை I.N.D.I.A கூட்டணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்விகள்:
தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புகளின் போது, பொதுமக்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் சில
1.மத்தியில் உள்ள பாஜக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
மிகவும் திருப்தி அளிப்பதாக இருந்தது - 16.3 சதவிகித மக்கள்
ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது - 37.9 சதவிகித மக்கள்
திருப்தியில்லை என தெரிவித்தவர்கள் - 36.4 சதவிகித மக்கள்
சொல்ல முடியாது / தெரியவில்லை - 9.5 சதவிகித மக்கள்
2. உங்கள் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடு எப்படி?
மிகவும் திருப்தி அளிப்பதாக இருந்தது - 13.7 சதவிகித மக்கள்
ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது - 29சதவிகித மக்கள்
திருப்தியில்லை என தெரிவித்தவர்கள் - 38.4 சதவிகித மக்கள்
சொல்ல முடியாது / தெரியவில்லை - 19 சதவிகித மக்கள்
கருத்து கணிப்பு முறை:
சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம் நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
கருத்து கணிப்பில் பிழை மார்ஜின் அளவானது + - 3% முதல் + - 5% இருக்கலாம் எனவும் 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.