விஜய் போட்ட ஆர்டர்! தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனா? – என்ன பதவி தெரியுமா?
விசிக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதன்படி 6 மாத காலம் அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் வியூக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜயுடன் இணைந்து கலந்து கொண்டார். அப்போது அரசியல் பேசக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் சொல்லி அனுப்பியும் அவர் அரசியல் பேசியதால் பல்வேறு கட்ட குழப்பங்கள் நிலவின.
இதையடுத்து விசிக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதன்படி 6 மாத காலம் அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஆதவ் விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் தவெகவில் இணைவதாக பல்வேறு தகவல்கள் கசிந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தபோது அவர் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டார். எல்லோருடனும் இணக்கமாக இருந்தார். கட்சியுடன், தலைமையுடன், நெருக்கமாக இணைந்து செயல்பட்டார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் கட்சியின் கூட்டணி விவகாரம் குறித்து அவர் மாறுபட்ட கருத்து தெரிவித்தது எதிர்காலத்திற்கு நெருக்கடியை தந்தது. அந்த அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் விளக்கத்தை தந்து கட்சியில் இணைய முனைப்பு காட்டுவார்கள்.
ஆனால் ஆதவ் அப்படி செய்யவில்லை. கட்சியில் இருந்து வெளியேற முடிவு எடுத்தார். எதிர்பாராத நிகழ்வு தான். எதிர்பார்க்கவில்லை. தவெகவில் இணைந்தால் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாழ்த்துகள். மகிழ்ச்சிதான்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவது உறுதி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருக்கு தேர்தல் வியூக பொதுச்செயலாளர் பொறுப்பு தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்த காளியம்மாளுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தவெகவில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிலர் மாநில பொறுப்பும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததாக தெரிகிறது. ஆனால் தலைமை அதனை மறுத்துள்ளதாகவும் தமிழக வெற்றி கழகத்தில் எந்த பொறுப்பாக இருந்தாலும் ஒருவருக்கு ஒரு பதவி தான் என்பதில் தலைமை உறுதியாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

