உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு!
உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறவும், வழங்கவும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறவும், வழங்கவும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம்.
மேலும், தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதாரை கட்டாயமாக்க்கப்படுகிறது. தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உறுப்பு தானம் எனும் சிறந்த தானம்:
நாம் மறைந்த பின் நம் கண்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், குடல், தோல் எனப் பல்வேறு உறுப்புகளும் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக அமையலாம். மண்ணில் புதையுண்டோ, தீயில் கருகியோ வீணாகும் உறுப்பை தானமாகக் கொடுப்பதால் எத்தனை உயிர்களை வாழவைக்கலாம் என்று நாம் என்றேனும் எண்ணியிருப்போமா?
உலக அழகியாக ஐஸ்வர்யா ராய் தனது அழகிய விழிகளை தானமாக்த் தர பதிவு செய்துள்ளார். அண்மையில் கூட கன்னட திரைப் பிரபலமான புனீத் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்தார். அதன் மூலம் 4 பேருக்கு கண்ணொளி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் உறுப்பு தானம் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்தவர்கள் ஹிதேந்திரன் என்றால் அது மிகையாகாது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி விபத்தில் சிக்கிய ஹிதேந்திரன் இரு நாட்கள் கடந்த பின்னர் மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயம் சிறுமி அபிராமிக்கு பொருத்தப்பட்டது. அதன் பின்னர் தான் தமிழகத்தில் உறுப்பு தானம் மிகப் பெரிய அளவில் அடையாளம் பெற்றது. இன்று பலரும் தங்களின் உறுப்புகளை தானமாகக் கொடுக்க முன்வருகின்றனர். உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டுதனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும். உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை) தானமாகப் பெற முடியும்.
அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.
எப்படி பதிவு செய்து கொள்வது?
தமிழக அரசின் www.tnos.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவுஅடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.