சர்ச்சை பேச்சு விவகாரம்; தி.மு.க. பேச்சாளர் மீது சென்னை கமிஷனரிடம் ஆளுநர் தரப்பு புகார்
தமிழக ஆளுநரை அவதூறாக பேசியதற்கு தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி காவல் ஆணையருக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் `ஆளுநரை அவதூறாகப் பேசக்கூடாது' என தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இருப்பினும், ஆர்.எஸ்.பாரதி உட்பட தி.மு.க-வினர் சிலர் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை அவதூறாகப் பேசிவருவதாக பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநரை சுட்டுக் கொல்ல பயங்கரவாதியை அனுப்புவோம் என தி.மு.க. கழகப் பேச்சாளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கருத்து தொடர்பாக தி.மு.க.வின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
நடவடிக்கை வேண்டும்
தி.மு.க.வின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தமிழக காவல்துறைக்கு முதுகெலும்பு இருந்தால், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.பாரதி ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும்,'' என நாராயணன் திருப்பதி கூறினார்.
அதே போல், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி காவல் ஆணையருக்கு, ஆளுநரின் இணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``தமிழ்நாடு ஆளுநரை அவதூறாகப் பேசியதன் காரணமாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபை சர்ச்சை:
ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் துணைத் தலைவர் கரு நாகராஜன் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆளுநரை அவதூறாக விமர்சித்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனவரி 9 நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார்.
அதேபோல, தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

