TN Housing And Urban Development: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு..! அரசாணை வெளியீடு..
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு ரூ.40 இலட்சத்திலிருந்து ரூ.50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு ரூ.40 இலட்சத்திலிருந்து ரூ.50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிதி துறை அமைச்சர் பட்ஜெட் உரையின் போது கட்டுமானச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, வரும் நிதியாண்டு முதல் ஊழியருக்கு ரூ.40.00 லட்சத்தில் இருந்து ரூ.50.00 லட்சமாக வீடு கட்டும் முன்பணத்திற்கான உச்சவரம்பு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனடிப்படையில், அரசு கவனமாக ஆய்வு செய்த பின்னர், தற்போதுள்ள வீடு கட்டும் முன்பணத்தின் உச்சவரம்பை அதிகரிக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், “ மாநில அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணத்தின் உச்சவரம்பை ரூ.40.00 லட்சத்தில் இருந்து ரூ.50.00 லட்சமாக (25%) உயர்த்தப்பட்டுள்ளது. அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு வீடு கட்டும் முன்பணத்தின் உச்சவரம்பு ரூ.60.00 லட்சத்தில் இருந்து ரூ.75.00 லட்சமாக (25%) உயர்த்தப்பட்டுள்ளது. வீடு கட்டும் முன்பணத்தின் உயர்த்தப்பட்ட உச்சவரம்புத் தொகை, இந்த உத்தரவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச உச்சவரம்புக்கு உட்பட்டு, ஊழியர்களின் 90 மாத சம்பளத்தை (ஊதியம்+தர ஊதியம்+D.A+ தனிநபர் ஊதியம்) விட அதிகமாக இருக்கக் கூடாது என்ற நிபந்தனை தொடர்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
- அதுமட்டுமல்லாமல், பழைய விகிதத்தில் வீடு கட்ட முன்பணம் அனுமதிக்கப்பட்டு, இன்னும் முன்பணத்தின் தவணை எதுவும் எடுக்கப்படாதவர்கள், தகுதியிருந்தால், கட்டுமானங்கள் / வீடு / மனை வாங்குவதற்கு, புதிய உச்சவரம்பின்படி கடன் வழங்கலாம்.
- நிதி தேவைக்காக இதுவரை அனுமதிக்கப்படாத வீடு கட்டும் முன்பணத்தை அனுமதிப்பதற்கான நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களும் இப்போது நடைமுறைக்கு வரும் புதிய உச்சவரம்பு வரம்பின்படி அனுமதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
- பழைய விகிதத்தில் வீடு கட்ட முன்பணம் பெற்று, வீட்டைக் கட்டி முடிக்காதவர்கள், தகுதிக்கு உட்பட்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டின் மூலம் கட்டுமானம் / தயாராக கட்டப்பட்ட வீடு / பிளாட் ஆகியவற்றிற்கான மேம்படுத்தப்பட்ட உச்சவரம்பில் உள்ள வித்தியாசத் தொகையைப் பெறலாம்.
- அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், தற்போதுள்ள தங்குமிடத்தை விரிவுபடுத்துவதற்கு / மேம்படுத்துவதற்கு, உச்சவரம்பு ரூ.50,00,000/- என்ற ஒட்டுமொத்த உச்சவரம்பில் 50% ஆக இருக்க வேண்டும்.
- அனைத்திந்திய சேவை அதிகாரிகளைப் பொறுத்த வரையில், ஏற்கனவே வழங்கப்பட்ட வழிமுறைகளும் பின்பற்றப்படும்.
- ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸின் அனுமதிக்காக நடைமுறையில் உள்ள மற்ற அனைத்து நிபந்தனைகளும் / உத்தரவுகளும் பின்பற்றப்படும்.
2023 -2024 ஆம் ஆண்டுக்கான வீடு கட்டும் முன்பணத்திற்கு பொருந்தும் வட்டி விகிதம் குறித்து நிதி துறையில் அரசாங்கத்தால் தனி உத்தரவுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.