குழந்தைகள் இருமல் மருந்து உயிரிழப்பு: மருத்துவர் கைது! அதிர்ச்சியில் மத்தியப் பிரதேசம், காஞ்சிபுரம் தொடர்பு?
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருமல் மருந்தை குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருமல் மருந்தை குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் உயிரிழப்பு
நவீன மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நவீன ஆங்கில மருத்துவத்தால் பல்வேறு நோய்களுக்கு உடனடி தீர்வும் கிடைத்து வருகிறது. ஆனால் இருந்தும் சில சமயங்களில் ஒரு சில தவறுகளால், எப்பொழுதாவது அரிதாக உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றுதான் வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் சீக்கர் மாவட்டத்தில் இருமல் மருந்து குடித்து உடல் நலன் பாதிக்கப்பட்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 10 குழந்தைகளும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 1 குழந்தையும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரத்தில் தயாரான மருந்து
இது தொடர்பாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் குழந்தைகள் குடித்த குடிநீர், குழந்தைகள் எடுத்துக்கொண்ட மருந்துகளின் மாதிரிகள், மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் உள்ளிட்டவத்தை வைத்து பல கட்ட ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணம் குழந்தைகள் பயன்படுத்திய இருமல் மருந்து என விசாரணைகள் தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட இருமல் மருந்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனருக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்தில் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மருந்தை தடை செய்த தமிழக அரசு
சந்தேகத்திற்குரிய இருமல் மருந்தை தடை செய்ய வேண்டும் என மத்திய பிரதேச மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருமல் மருந்திற்கு (Coldrif) தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மருத்துவர் கைது
இந்நிலையில் கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த ஸ்ரீசான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்தது. இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல டாக்டரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.தற்போது குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





















