Udayanidhi Stalin: கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி: முதல்வன் பட பாணியில் ஆணையை கையில் கொடுத்த அமைச்சர் உதயநிதி! குவியும் பாராட்டு!
வேலை வேண்டும் என்று நேரில் கோரிக்கை விடுத்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு, அமைச்சர் உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பணி ஆணை வழங்கினார்.
வேலை வேண்டும் என்று நேரில் கோரிக்கை விடுத்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு, அமைச்சர் உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பணி ஆணை வழங்கினார்.
இதுகுறித்துத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளதாவது:
’’பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி பாப்பாத்தி என்பவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தான் முதுநிலை பட்ட மேற்படிப்பு படித்துள்ளதாகவும் தெரிவித்து தனது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு ஏதாவது வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பாப்பாத்தியின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளி முகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணி நியமனம் வழங்கிட ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார்.
அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.’’
இவ்வாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளது.