டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 91 வது ஆண்டாக தண்ணீர் திறப்பு.
முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 12000 கன அடி தண்ணீரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்.
காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும். ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் அணை ஜனவரி 28 ஆம் தேதி மூடப்படும். இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார் 16.50 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பாசனத் தேவை குறையும்.
மேட்டூர் அணையில் உரிய நீர் இருப்பு இல்லாத நிலையில் நடப்பாண்டு வழக்கமான நடைமுறைப்படி ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து இன்று நண்பகல்வாக்கில் 109 அடியை எட்டியது.
இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். காவிரி அன்னையைப் போற்றும் வகையில், ஆற்றில் மலர்களையும் அவர் தூவி வணங்கினார்.
முதல்கட்டமாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அளவு படிப்படியாக டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து,திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூன்றரை நாள்களில் 200 கிலோமீட்டர் தூரம் பயணித்து கல்லணையை சென்றடையும். அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையில் உள்ள நீர்மின் நிலையம், சுரங்க மின்நிலையம், 7 கதவணை மின் நிலையங்கள் வாயிலாக 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 ஆம் தேதியன்று 19 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. போதிய நீர் இருப்பு இல்லாததால் காலதாமதமாக இன்றுடன் சேர்த்து 61 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 91 வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் மட்டுமன்றி, காவிரிக் கரையோரப்பகுதிகளைச் சேர்ந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.