காவல்துறை VS போக்குவரத்து துறை; இது எப்போ முடியும்..? - 5 அரசு பேருந்துகளுக்கு அபராதம்
உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிப்பு
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறிய அரசு பேருந்துகள்; அபராதம் விதிப்பு
சமீபத்தில் அரசு போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் அதன் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருவது பேசு பொருளாகி வருகிறது.
இதற்கிடையே உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் இருந்து நகருக்குள் செல்லும் சாலையை, விபத்துகளை தடுப்பதற்காக ஒரு வழி பாதையாக மாற்றி அமைத்து காவல் துறையினர் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை மீறி சாலை தடுப்புகளை கடந்து சட்ட விரோதமாக நகருக்குள் வந்த அரசு பேருந்துகளை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி தலா 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பல இடங்களில் இது போன்று தொடர்ந்து அரசு போக்குவரத்து துறை பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது விந்தையாக உள்ளது.
நாங்குநேரி சம்பவம்:
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்ற போது அங்கு நின்ற ஒரு காவலர் பஸ்ஸில் ஏறி உள்ளார். இதனை அடுத்து நடத்துனர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது அந்த காவலர் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து நடத்துனர் அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும் இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து அவர் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம், நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது குறிப்பிடத்தக்கது.