TN Railway Stations: அப்கிரேட் ஆகிறது 34 தமிழக ரயில் நிலையங்கள் - அடிக்கல் நாட்டுகிறார் மோடி: உங்க ஊர் இருக்கா?
TN Railway Stations: தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 ரயில் நிலையங்களை உலகத் தரத்தில் மேம்படுத்தும் திட்டத்திற்கு, பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
TN Railway Stations: தமிழ்நாட்டில் 4 ரயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரயில் பாதையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்:
எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களை, உலகத் தரத்தில் மேம்படுத்தும் “அம்ருத் பாரத் நிலையம்” எனும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினர். தேர்வான ஆயிரத்து 318 ரயில் நிலையங்களில், முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில ரயில் நிலையங்களும் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில், “அம்ருத் பாரத் நிலையம்” திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 554 ரயில் நிலையங்களுக்கான மேம்பாட்டுப் பணிகளை காணொலி வாயிலாக பிரதமர் இன்று திறந்து வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்கள்:
“அம்ருத் பாரத் நிலையம்” திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 ரய்ல் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் தெற்கு ரெயில்வே சாா்பில் 32 ரெயில் நிலையங்கள், தென் மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் திருநெல்வேலி ரெயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரெயில் நிலையம் ரூ.118 கோடியிலும், திருச்சூா் ரெயில் நிலையம் ரூ.384.81 கோடியிலும், செங்கனூா் ரெயில் நிலையம் ரூ.205 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன. மற்ற ரெயில் நிலையங்களை பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலைய விவரங்கள்:
ரயில் நிலைய விவரங்களின்படி, சென்னை கடற்கைரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தர்மபுரி, ஒசூர் ஆகிய 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. அதாவது, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது, இலவச வைஃபை வசதி, காத்திருப்பு அறை மற்றும் லிஃப்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுதவிர தமிழகத்தில் 4 ரயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரயில் பாதையையும் மோடி திறந்து வைக்கிறார். முன்னதாக, நேற்று சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.