18 ஆண்டுகளுக்கு பிறகு தூசி தட்டப்படும் மேம்பால ஊழல் வழக்கு.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
Flyover Scam: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான மேம்பால ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 115.50 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேம்பாலம் ஊழல் வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2001ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.சி.டி. ஆச்சாரியலு அளித்த புகாரின் பேரில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றப்பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) வழக்குப் பதிவு செய்தது.
கடந்த 2004 ஆம் ஆண்டு, விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, கருணாநிதி, முன்னாள் மேயர் ஸ்டாலின் (தற்போதைய முதலமைச்சர்), க. பொன்முடி (தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர்), முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் மீது சிபி-சிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கடந்த 2005ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க அப்போதைய சபாநாயகர் ஒப்புதல் அளித்தார். ஆனால், 2006ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனக் கூறி வழக்கை முடிக்க சிபி-சிஐடி முன்வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை சபாநாயகர் ஆவுடையப்பன் வாபஸ் பெற்றார்.
18 ஆண்டுகளுக்கு பிறகு தூசி தட்டப்படும் வழக்கு:
குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க தரப்பட்டு அனுமதியை சபாநாயகர் ஆவுடையப்பன் வாபஸ் பெற்றதற்கு எதிராக 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சபாநாயகரின் முடிவு தன்னிச்சையானது என கோவையை சேர்ந்த மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் என்பவர் வழக்கை தொடர்ந்தார்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, 18 ஆண்டுகளுக்கு பிறகு, சபாநாயகரின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய காரணம் என்ன என கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "சபாநாயகரின் உத்தரவு இத்தனை ஆண்டுகளாக பொது வெளியில் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான், மனுதாரருக்கு இது குறித்து தெரிய வந்ததால், மனு தாக்கல் செய்யப்பட்டது" என்றார்.
இந்த வழக்கை பதிவு செய்வதற்கு பின்னணியில் நேர்மையான காரணம் இருக்கிறதா என்பதை அறிய நீதிமன்றத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என மனுதாரர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.