பாரம்பரிய மருந்துகளுக்கான தவறான விளம்பரங்கள் - மருத்துவ சங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
SC IMA: பாரம்பரிய மருந்துகளின் தவறான விளம்பரங்களைத் தடை செய்யக் கோரி இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

SC IMA: மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை நிராகரிப்பு:
பாரம்பரிய மருந்துகள் தொடர்பான தவறான விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மருத்துவ சங்கம் (IMA) கடந்த 11ம் தேதி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேதத்திற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் நீதிமன்றத்தை அணுகியபோது இந்த வழக்கு தொடங்கியது. மனுவில், பதஞ்சலியின் விளம்பரங்கள் தவறாக வழிநடத்துவதாகவும், நவீன மருத்துவத்தை அவமதிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?
ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருந்துகளை விளம்பரப்படுத்துவதற்கான விதியை மத்திய அரசு நீக்கிய பிறகு, மாநிலங்கள் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்று, வழக்கை விசாரித்த நீதிபதி கே.வி. விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். இந்திய மருத்துவ சங்கம் கோரிய முக்கிய நிவாரணங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதால், வழக்கை முடிக்க நீதிபதி பி.வி. நாகரத்னா பரிந்துரைத்தார். மத்திய அரசு நீக்கிய விதியை நீதிமன்றத்தால் மீண்டும் நிலைநிறுத்த முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார்.
முந்தைய விசாரணைகளில், பதஞ்சலியின் தவறான விளம்பரங்கள், ஒழுங்குமுறை அதிகாரிகளின் செயலற்ற தன்மை மற்றும் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவின் திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றில் நீதிமன்றம் கவனம் செலுத்தியது. பதஞ்சலிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது, பின்னர் நிறுவனம் பலமுறை மன்னிப்பு கேட்ட பிறகு அவை நிறுத்தி வைக்கப்பட்டன. விளம்பரங்களுக்கு தடை விதிப்பதும் ஆயுஷ் மருந்துகளுக்கான உற்பத்தி அனுமதிகளை வழங்குவதும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிக்கும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
விதியை நீக்கிய ஆயுஷ் அமைச்சகம்
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியன்று மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள், 1945 இன் விதி 170 ஐ ஆயுஷ் அமைச்சகம் நீக்கியது. இந்த விதியின் கீழ், ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருந்துகளை விளம்பரப்படுத்துவதற்கு மாநில உரிமம் வழங்கும் அதிகாரியின் முன் ஒப்புதல் கட்டாயமாக இருந்தது. ஆனால், இந்த விதியை நீக்குவது தவறான கூற்றுகளைத் தடுப்பதில் சவால்களை அதிகரித்தது. இருப்பினும், ஆகஸ்ட் 2024 இல், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, விதி 170 ஐ நீக்குவதை நிறுத்தி, முன் ஒப்புதலுக்கான தேவையை தற்காலிகமாக தொடர உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.





















