"இயற்கை பொக்கிஷங்களை பாதுகாப்பதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" - சேலம் மாவட்ட ஆட்சியர்
சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் நடைபெற்ற பேச்சு போட்டி, ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
ஈர நிலங்களை பாதுகாப்பது மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி உலக ஈர நில தினம் கொண்டாடப்படுகிறது.
சேலம் மாவட்ட வனத்துறையில், சேலம் வனக்கோட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தில் இந்த ஈர நிலப்பகுதி பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கி நடைபெற்றது. இப்பணியை அந்தந்த மாவட்ட வன அலுவலர் தலைமையில் வன ஊழியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தினர். சேலம் வனக் கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூர், வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சேர்வராயன் மலை, ஜருகுமலை, சூரியமலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை அடிவார பகுதிகள், அங்குள்ள குட்டைகள், ஏரிகள் போன்றவற்றில் கணக்கெடுப்பு நடந்தது.
இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஈர நிலங்கள், ஈர நிலங்களின் பிரிவுகள், ஈர நிலங்களின் பயன்கள் மற்றும் ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, "ஈர நிலம் என்பது சதுப்புநிலம் இயற்கையான நீர் நிலைகளாக அமைந்துள்ள பகுதி. ஆற்று வாய்க்கால்கள், நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் பாசன நோக்கங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை ஈரநிலங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த ஈர நிலங்களை முறைப்படுத்தி பாதுகாப்பதால் நிலத்தடி நீரின் அளவு அதிகரிப்பதுடன், பறவைகள், வன உயிரினங்கள் தாகத்தைப் போக்கவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் செழிக்கவும், உபயோகமாக இருக்கும் என்பதுடன் குடிநீர் தேவைகளை வெகுவாக பூர்த்தி செய்வதுடன் சூழலியல் மற்றும் உயிரியல் பரிணாமங்கள் பாதுகாக்கப்படுகிறது.
"ஈரநிலங்களும், மனித நல்வாழ்வும்" : “ஈரநிலங்கள் அரிதான உயிரினங்கள் முதல் மனித சமூகங்கள் வரை வாழ்க்கையை வளர்க்கின்றன. இளைய தலைமுறையினர் இந்த இயற்கை பொக்கிஷங்களை பாதுகாப்பதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாணவ, மாணவிகள் பறவைகளைப் பற்றிப் படிப்பதும், ஈரநிலங்களைப் பற்றி படித்து ஆராய்ச்சி செய்வதும் போன்ற பல்வேறு படிப்புகள் உள்ளன. இதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவிட வேண்டும். மேலும், நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஈரநிலத்தினைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு மாணவ, மாணவியரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்" என ஆட்சியர் பிருந்தா தேவி மாணவர்களிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உலக ஈர நில தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் நடைபெற்ற பேச்சு போட்டி, ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக வன உயிரியல் பூங்காவினை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பார்வையிட்டார். மான் பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட அவர் உயிரில் பூங்கா பராமரிப்பு பணிகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.