பாஜகவுடன் கூட்டணி; அதிருப்தியில் அதிமுகவில் இணைந்த தமாகா முக்கிய நிர்வாகிகள்
மூப்பனார் கொள்கைக்கு முரணாக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் த.மா.கா கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டதாக முன்னாள் த.மா.கா சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் காளிமுத்து தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் என்பவர் தமாகா, பாஜகயுடன் கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியான ஏற்புடையதாக இல்லை என்று கூறி கட்சியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் அவர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் காளிமுத்து தலைமையில் அவரது மனைவி கல்பகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி காளிமுத்து ஆகியோருடன் 30க்கும் மேற்பட்டோர் தமாகாவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறினார்.
இதனிடையே அதிமுகவில் இணைந்த காளிமுத்து கூறுகையில், மூப்பனார் கொள்கைக்கு முரணாக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டதாக தெரிவித்தனர். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கூட்டணி குறித்து ரகசிய வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிற்கு ஆதரவாகவே பேசிய நிலையில் பாஜகவுடன் கூட்டணி அறிவித்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.
இதேபோன்று, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகத் தலைவி சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஆனந்தன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சாந்தி ஆனந்தன் உள்ளிட்டோர் சந்தித்தனர். தொடர்ந்து, சசிகலா அதிமுகவை காப்பாற்ற வந்தவர் அல்ல கட்சியை சுரண்ட வந்தவர் என்பதும் அவர் சுயநலவாதி என்பதும் தெரிந்ததால் சசிகலா பேரவை கலைக்கப்பட்டதாக பேட்டி அளித்தார். சசிகலா பேரவையின் கீழ் செயல்பட்ட அனைத்து கிளை அணிகளும் கலைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.