இந்த மாதம் 25-ஆம் தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா.. ரெடியாகுங்க.. எல்லா விவரமும் இங்கே..
ஏற்காடு கோடை விழா இந்த ஆண்டு 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்பாக (25.05.2022) தொடங்கும் என நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
![இந்த மாதம் 25-ஆம் தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா.. ரெடியாகுங்க.. எல்லா விவரமும் இங்கே.. The Yercaud Summer Festival is scheduled to start on the 26th, a day earlier 25th it is getting started. இந்த மாதம் 25-ஆம் தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா.. ரெடியாகுங்க.. எல்லா விவரமும் இங்கே..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/21/742cad3f5c17c5459fe4301cd7b51b00_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா நோய்த்தொற்று பரவிவந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காடு கோடை விழா இந்த ஆண்டு 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்பாக (25.05.2022) தொடங்கும் என நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், ஏற்காட்டினை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 இலட்சம் அரிய மலர்களைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி மற்றும் மாம்பழ கண்காட்சி அமைக்கப்படவுள்ளது.
ஏற்காடு கோடை விழாவினை வேளாண் மற்றும் உழவர் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு கோடை விழாவிற்கென சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்காட்டின் முக்கிய இடங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றிக் காண்பிக்கும் வகையில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை விழாவின்போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வாகனங்கள் ஏற்காடு செல்லும் போது வழக்கமான சேலம் – ஏற்காடு நெடுஞ்சாலை வழியாகவும், திரும்பி செல்லும் போது ஏற்காடு, குப்பனூர் – சேலம் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவின்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அனைத்து அரசுத் துறைகளும் பங்கேற்கும் கண்காட்சி அரங்குகள் இடம்பெறவுள்ளது.
மேலும், தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், செல்ல பிராணிகள் கலந்துகொள்ளும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக ஏற்காடு கோடை விழா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஏழு நாட்கள் நடைபெற உள்ளதால் ஏற்காட்டில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கோடை விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ஏற்காடு மலைப் பாதையில் செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்றும் ஏற்காட்டில் வசிக்கும் மக்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்தத் தேவையில்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்காடு கோடை விழா நடைபெற உள்ளதால் சேலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)