20 ஆண்டுகளாக சுடுகாட்டில், சேவை செய்துவரும் ’தனியொருவர்’ சீதா..!
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியில் வசித்து வரும் சீதா என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக நான்குரோடு பகுதியிலுள்ள டி.வி.எஸ் மயானத்தில், தனி ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சடலங்களை அடக்கம் செய்து வருகிறார்.
பெண்கள் மயானம் பக்கமே செல்லக்கூடாது என்று சொல்லும் அக்காலத்திலே, தனது 12 வயதில் சீதா சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். எவ்வித அச்சமுமின்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்து, தனது வேலையை ஒரு சேவையாகச் செய்து வருகிறார் சீதா.
பல ஆண்கள் கூட செய்யத் தயங்கும் இவ்வேலையினை, எப்படி ஒரு பெண்ணாக செய்ய முடிகிறது என சீதாவிடம் கேட்டபோது, "நான் சிறுவயதிலிருந்தே இந்த வேலையைச் செய்து வருகிறேன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்துள்ளேன். நான் இந்த வேலைக்கு வந்தபோது 12 வயது, பலரும் எதிர்த்தனர், அந்த எதிர்ப்புகளையெல்லாம் நேரடியாகச் சந்தித்தேன்" என்றார்
மேலும் அவர் கூறியதாவது, "நான் இந்த வேலைக்கு வருவதற்கு காரணம் எனது அம்மாதான். நான் சிறுவயதாக இருக்கும்பொழுது , தந்தை குடித்துவிட்டு சண்டையிட்டு தொல்லைகள் செய்த காரணத்தால், எனது அம்மா தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பிறகு சில நாட்களிலேயே தந்தையும் இறந்துவிட்டார். என் அம்மாவிற்குதான் என்னால் இறுதி மரியாதை கூட செய்ய இயலவில்லை, அதனால் மற்ற உடல்களை பார்க்கும்பொழுது எனது அம்மாவாகவும், என் உடன் பிறப்பாகவும் நினைத்து அவர்களின் உடல்களை அடக்கம் செய்கிறேன். என்னுடன் இப்பொழுது இருப்பது என் பாட்டி மட்டுமே, அவர் என்னை எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். அதன்பிறகு தலைமுறை தலைமுறையாக செய்துவந்த தொழில் என்பதால் இருபது வருடங்களாக இதனை வேலையாக இல்லாமல் ஒரு சேவையாக செய்யத் தொடங்கினேன், 12 வயது பெண் என்பதால் எத்தனையோ பேர் "சுடுகாட்டுக்குப் போய் எதுக்கு இந்த வேலையை செய்கிறார்" என கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்லும் பதில் ஒன்றே ஒன்றுதான் "இது வேலை அல்ல சேவை".
மேலும் அவர் கூறியது அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது."பல ஆண்கள்,இரவு நேரங்களில் குடித்துவிட்டு மயானத்திற்கு வருவது, தொந்தரவு செய்வது, மரியாதை இல்லாமல் தவறாக நடந்துகொள்வது போன்ற அனைத்தையும் சமாளித்துக்கொண்டு இந்த வேலையைச் செய்து வருகிறேன்" என்றார். என் பணியில் இதுவரை பல்வேறுவிதமான சடலங்களை புதைத்து உள்ளேன், குறிப்பாக அனாதைப் பிணங்கள், மருத்துவமனையிலிருந்து வரும் பிணங்கள், அழுகிய நிலையிலும், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள் உடலும் சடலமாக கொண்டு வரப்படும். திருடாமல், பொய் சொல்லாமல், ஒருவரை ஏமாற்றாமல் செய்யும் எந்தத் தொழிலும் தவறு அல்ல, எனக்கு பிடித்ததால் இந்த வேலையை நான் செய்கிறேன். அதேபோன்று உங்களுக்குப் பிடித்த வேலைகளை அச்சமின்றி செய்யுங்கள்" என்று பெண்களுக்கு அறிவுரை கூறினார்.
"பல பெண்கள் திருமணமாகி மூன்று மாதத்தில் கொடுமை தாங்காமல் இறந்து விட்டதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் பல சடலங்களைப் பார்த்திருக்கிறேன், அதனால் பலரும் திருமணம் செய்துகொள் என்று கூறி வந்தாலும், "என் வாழ்க்கையை கன்னியாஸ்திரியாக இந்த மயானத்திற்கு அற்பணித்து உள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் சீதா கூறினார்.
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்று வாழ்ந்து காட்டும் சீதா ஒரு உதாரணம்.