"மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்பதே முதலமைச்சரின் எண்ணம்" -அமைச்சர் கே.என்.நேரு.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட நடப்பாண்டு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு கே.என்.நேரு கலந்து கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 26, 199 மாணவ மாணவியருக்கு விலை இல்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் நிகழ்வாக கன்னங்குறிச்சியில் பயிலும் 128 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 13 மாணவர்களுக்கு இலவச சீருடையும், ஏழை எளிய பெண்களுக்கு பத்து லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, "திமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் மரியாதை கிடைத்து வருகிறது. அரசு பள்ளியில் பயின்ற ஏழை எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு காரணமாக பொறியியல் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்விற்கு பிறகு மற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்துவதில் இருந்தே அரசு பள்ளி மாணவர்களுக்கான முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை அரசு பள்ளி மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இலவச மிதிவண்டி, இலவச பாட புத்தகங்கள், காலை உணவு திட்டம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். நடப்பாண்டில் நகராட்சி நிர்வாக துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளிகல்வித்துறைக்கு மற்ற துறைகளை விட அதிகமாக 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2000 கோடி மதிப்பில் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன நடபாண்டிலும் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.