சேலத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின்.. வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு..
நாளை காலை 10 மணியளவில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
டெல்டா பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகை தந்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்டம் ஆட்சித் தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, வழி எங்கும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை காலை 10 மணியளவில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதன்பின் மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் "திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் " நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மேட்டூர் செல்கிறார். இதனிடையே சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி, ஓமலூர், மேச்சேரி என பல பகுதிகளில் மலர்கள் தூவியும், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மற்றும் நாளை பல்வேறு அமைச்சர்கள் வருகை தர வாய்ப்புள்ளதால் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நிகழ்ச்சிகள் நடைபெற சேலம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா பாசனத்திற்காக 89 வது ஆண்டாக திறக்கப்பட உள்ள மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வழக்கமாக ஜூன் மாதம் 12 ஆம் தேதி குறுவை சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். இதுவரை ஜூன் மாதத்தில் 12 ஆம் தேதிக்கு முன்பாக 10 முறையும், நீர் இருப்பு குறைவாக இருந்த காரணத்தினால் ஜூன் மாதம் 12 ஆம் தேதிக்கு பின்னர் 60 முறையும், ஜூன் மாதம் 12 ஆம் தேதி 18 முறைகள் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்ந்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் நீர் மட்டம் 117.28 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக காவிரியில் மே மாதமே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.