மனைவி கவலைக்கிடம்...கழுத்தை அறுத்துக் கொண்ட கணவர் - சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
மனைவி உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியதால் கணவர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்கொலை முயற்சி.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆலமரத்து மேடு பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ஹரிஹரன் (23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த லட்சுமியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை மனைவி லட்சுமி உடல்நிலை கவலைக்கிடமாகஇருந்ததாக மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஹரிஹரன் கையில் வைத்திருந்த பிளேடால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கழுத்தில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவதத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த வாரம் சேலம் மாநகர அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். சோபா ரிப்பேர் செய்யும் தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஆனந்தனுக்கு உடல்நிலை மோசமாகி உள்ளது. இதனால் ஆனந்தன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் தன்னிடம் இருந்த பிளேடை பயன்படுத்தி தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே மாதத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இரண்டு பேர் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)