சென்னையில் இருந்து மும்பை வரை 1343 கி.மீ 17 மணி நேரத்தில் கடந்து சேலம் இளைஞர் சாதனை
அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனையை செய்ததாக கூறினார்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள காந்தி மைதானத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிசிஏ பட்டதாரியான பூபதி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில், புதிதாக பூ டெக் எனும் யூடியூப் சேனலை துவங்கி பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைப்பர்களை கொண்டு பணம் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் நிறுத்தாமல் மும்பை வரை சென்று 1,343 கிலோமீட்டர் தூரம் 17 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை தனியாக சென்னையில் இருந்து மும்பை வரை விரைவில் கடந்த நபர் என்று இந்திய புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து பூபதி கூறுகையில், "சென்னையில் இருந்து மும்பை வரை 1343 கிலோமீட்டர் தூரம் வண்டியை நிறுத்தாமல் 17 மணி நேரம் 36 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளேன். இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனையை செய்ததாகவும், 76-80 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே சென்று சாதனையை புரிந்ததாக கூறினார். இந்த 1343 கிலோமீட்டர் தூரத்தில் ஏழு முறை பெட்ரோல் அடிப்பதற்கு மட்டுமே வண்டியை நிறுத்தியதாகவும், இந்த சோதனைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பாக இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் உலர் பழங்களை, தண்ணீர் மட்டுமே உணவாக அறிந்து முடித்துள்ளதாக கூறினார்.
மேலும், இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது யூடியூப் வியுவர்ஸ்களுக்காக வித்தியாசமான வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு 1 ரூபாய் நாணயங்களாக மாற்றி தான் ஆசைப்பட்ட இரு சக்கர வாகனத்தை விற்பனையகத்தில் வாங்கியிருக்கிறார். இந்த 1 ரூபாய் நாணயங்களை பெறுவதற்காக இரண்டு மாதங்களாக பல்வேறு வங்கிகள், கோவில் உண்டியல் பணம் என பழனி, மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து 1 ரூபாய் நாணயங்களை பெற்று வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.