Pongal 2022 | பொங்கல் விற்பனையை எதிர்பார்த்து காத்திருக்கும் சேலம் வெள்ளி கொலுசு.. இத படிங்க..
தீபாவளியின்போது மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சேலம் வெள்ளி கொலுசு கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளது
காலங்கள் மாறினாலும் பெண்களுக்கு கொலுசு அணியும் வழக்கம் இன்றும் உள்ளது. பெண்களுக்கு விருப்பமானால் பொருட்களில் ஒன்றான வெள்ளி கொலுசு நீங்கா இடத்தைப் பிடித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கைகளில் உருவாக்கப்படும் வெள்ளிக் கொலுசிற்கு இந்தியா மட்டுமன்றி பல வெளிநாடுகளிலும் பெண் ரசிகைகள் உண்டு. உலகிலேயே அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில் மட்டுமே வெள்ளிக் கொலுசு எந்திரங்கள் இன்றி கைகளில் உருவாக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் முந்தைய ரோமானிய பேரரசில் பயன்படுத்திய வெள்ளி நாணயங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் 1987-ஆம் ஆண்டு சேலத்தில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் சேலம் வெள்ளி பொருட்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக சிறந்து விளங்குவது தெரியவருகிறது.
வெள்ளி கொலுசுகள் உருவாக்கும் பணிகள் சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்ப்பேட்டை, மரவனேரி, ஜங்ஷன், ஜாகிர் அம்மாபாளையம், ஓமலூர் எனப் பல இடங்களில் குடிசைத் தொழிலாக வெள்ளி கொலுசு உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க சேலம் வெள்ளி தற்போது நலிவடைந்து வருகிறது. பரம்பரை பரம்பரையாக வெள்ளி கொலுசு தயாரித்து வந்தவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் வெள்ளி தொழிலாளர்கள் வறுமையின் காரணமாக மாற்று தொழில் தேடிச் சென்றவர்கள் தற்போது வரை திரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளி உருக்கு பட்டறை உரிமையாளர் சண்முகம் கூறுகையில், 20 ஆண்டுகளாக வெள்ளி கொலுசு உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு வெள்ளிக் கொலுசு உருவாக்குவதற்கு இருபதிற்கும் மேற்பட்ட நிலைகளை கடக்க வேண்டும். வெள்ளி உருக்குதல், கெட்டி பிடித்தல், கம்பி பிடித்தல், வடிவமைத்தல், மெருகு என பல நிலைகளை கடக்க வேண்டும்.
சேலம் வெள்ளி கொலுசில் பல நூறு ஆண்டுகளாக சிறந்து விளங்குவதற்கு காரணம் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் உருவாக்கப்படும் வெள்ளி கொலுசுகள் இயந்திரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு பாரம்பரிய முறையில் எந்தவித எந்திரங்களும் இல்லாமல் முழுக்க முழுக்க தேர்ச்சிபெற்ற கலைஞர்களின் கைகளில் உருவாகுகிறது. இதுமட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் உருவாக்கப்படும் வெள்ளி அரைஞான் கயிறு, செயின் என அனைத்தும் கைகளிலேயே உருவாக்கப்படுகிறது. மேலும், கைவினை பொருளாக உருவாக்கப்படும் சேலம் வெள்ளி கொலுசு அணிந்தால் நரம்பியல் ரீதியான பல நன்மைகள் உண்டு என்று கூறுகிறார்.
சேலம் வெள்ளி கொலுசு வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் பஷிர் அஹமத் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் வெள்ளி தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வெள்ளி என்றால் இந்தியா மட்டுமின்றி உலகிற்கே பிரபலமானது சேலம் வெள்ளி.
சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் பேர் வெள்ளி கொலுசு உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்ப்பேட்டை, மணக்காடு, சிவதாபுரம், ஜங்ஷன், அம்மாபாளையம் என பல இடங்களில் வெள்ளி கொலுசு உருவாக்கும் தொழில் நடந்து வருகிறது. டெல்லி ஆக்ரா போன்ற இடங்களில் செய்யப்படும் கொலுசானது இயந்திரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இதனால் அங்கு செய்யப்படும் கொலுசுகள் மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கிறது. குடிசைத் தொழிலாக செய்யப்படும் வெள்ளி கொலுசு இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா போன்ற மாநிலங்களுக்கும், சவூதி, துபாய், சிங்கப்பூர் என பல வெளிநாடுகளுக்கும் சேலம் கொலுசு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் முற்றிலுமாக முடங்கிய சேலம் வெள்ளி கொலுசு தொழில், தற்போது வரை கொரோனாவால் மற்ற தொழிலுக்கு சென்ற கூலித் தொழிலாளிகள் திரும்பி வராததால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தமிழக அரசு வெள்ளி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தீபாவளியில் போது மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சேலம் வெள்ளி கொலுசு கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளன. தற்போது, தமிழர் திருநாள் பொங்கல் விற்பனையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வெள்ளி கொலுசு தொழிலாளர்கள்.