வடமாநில தொழிலாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
மணியனூர் பகுதியில் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வரும் ஜாகிர் கான் என்பவரை நேற்று இரவு மது அருந்திய நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அதில் சேலம் மாவட்டத்தில் மணியனூர், செவ்வாய்பேட்டை, சிவதாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். இந்த நிலையில் மணியனூர் பகுதியில் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வரும் ஜாகிர் கான் என்பவரை நேற்று இரவு மது அருந்திய நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எந்தவிதமான பிரச்னைக்கும் போகாமல் இருந்தவரை தாக்கியுள்ளனர். இதனால் நாங்கள் இங்கு தங்கி வாழ்வதற்கு அச்சமாக உள்ளது. எனவே சக ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைத்திடவும் ஜாகிர் கான் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை கோரியும் பாதுகாப்பு கேட்டு வடமாநில தொழிலாளர்கள் 30 பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொதுமக்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், காடையாம்பட்டி அருகே ரங்கனூர் காட்டுவளவு பகுதியில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமையான கோவில். இந்த கோவிலில் எங்களுடைய முன்னோர்கள் வணங்கி வந்துள்ளனர். ஆனால் தற்போது கோவிலுக்கு சென்று வழிபட வேறு சமூகத்தை சேர்ந்த சிலர் அனுமதி மறுத்து வருகின்றனர். காரணம் கேட்டால் வேறுகள் சமூகத்தை சேர்ந்த நபர் கோவிலுக்குள் வரக்கூடாது என்றும், அவ்வாறு மீறி நுழைந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோர் உடந்தையாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். தாசில்தாரிடம் கேட்டதற்கு வேறு சமூகத்திற்கு சாதகமாக செயல்பட்டு எங்களை கோயிலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கிறார். காலம் காலமாக வழிபட்டு வந்த திருக்கோவிலில் தற்போது அனுமதி மறுப்பதால் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் முடியாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சாதி பெயர் சொல்லி திட்டிய ராஜமாணிக்கம், அவரது மனைவி மற்றும் விஏஓ தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களை கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் சமூகத்தை சேர்ந்த அனைவரும் சென்னைக்கு சென்று முதலமைச்சர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். கோவிலுக்குச் சென்று வழிபட அனுமதி மறுத்த நபர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.