நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை - உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கோஷங்களை எழுப்பினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மேல்தொம்பை பகுதியை சேர்ந்தவர் ஜோதி வேல். விவசாயியான இவருக்கும் அவரின் பக்கத்து காட்டுக்காரர் ராஜூ என்பவருக்கும் இடையே வரப்பு தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு குடும்பத்தாரும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு உறவினர்கள் மற்றும் அடியாட்களுடன் ஜோதி வேல் வீட்டிற்குள் புகுந்த ராஜூ, ஜோதி வேல், அவரின் மனைவி நீலாவதி மற்றும் சகோதரர் ராமசாமி ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஜோதி வேல் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மல்லியகரை காவல்நிலைய போலீசார் அவர்களை கைது செய்யாததை கண்டித்து உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதேபோல் சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள பரவக்காடு பகுதியை சேர்ந்த கோபி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி காவல் துறை வேனில் ஏற்றி டவுன் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கோபி கூறும்போது, "எனது முதல் மனைவி காந்தா இறந்துவிட்டார். இந்த நிலையில் காந்தா பெயரின் 60 சென்ட் நிலமும் எனது பெயரில் 40 சென்ட் நிலமும் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் எனது முதல் மனைவியின் மகன்கள் கூரை அமைத்து வாழ்ந்து வந்தனர். நானும் அதே இடத்தில் கூரை அமைத்து வாழ்ந்து வந்தேன். இந்த நிலையில் முதல் மனைவியின் மகன்களான சேட்டு, சுந்தரம், ராமா ஆகியோர் ஒரு ஏக்கர் சொத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இதை தர மறுத்ததால் கொலை செய்து விடுவதாக மிரட்டி என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் முதல் மனைவியின் மகன்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டு தர வேண்டும். ஒரு தலைப்பட்சமாக செயல்படும் கருப்பூர் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர். சொத்தை அபகரித்துக் கொண்டு கொலை முயற்சி ஈடுபட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.