Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டை தடுக்க 6 தனிப்படை... வங்காநரியை பிடித்து வந்தால் 7 ஆண்டு சிறை தண்டனை
காட்டிற்குள் யாரேனும் நுழைந்துள்ளார்களா என்பதை அறிய வனத்துறையினர் நவீன ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி பகுதியில் உள்ள கொட்டவாடி, சின்னமநாயக்கன் பாளையம், ரங்கனூர், தமையனூர், சின்னகிருஷ் ணாபுரம், வடுகத்தம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், நூதன முறையில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தி, கோயிலில் பொங்கலிடுவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.
வங்காநரி ஜல்லிக்கட்டு:
இதற்காக காட்டிற்குள் சென்று வங்காநரியை பிடித்து வந்து, ஊர் கோயிலில் வைத்து வழிபட்டு, பிறகு தெருக்களில் ஓட விட்டு விரட்டி வந்தால், நோய் நொடியின்றி மக்கள் வாழலாம் என்பது அங்கு உள்ள மக்களின் ஐதீகமாக உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் வனத்துறையின் தடை உத்தரவை மீறி, வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதை வாடிக்கையாக்கியுள்ளனர். கடந்தாண்டு, வங்காநரியை பிடித்து வருவது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி குற்றச்செயல் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணித்து வனத்துறையினர் தடுத்தனர்.
வனத்துறை எச்சரிக்கை:
அதேபோல் இந்த ஆண்டு, வங்காநரி பிடித்து வருவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக காட்டிற்குள் சென்று யாரேனும் வங்காநரியை பிடித்து வந்தால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டை தடுக்க தனிப்படை:
பொங்கல் முடிந்த பின், சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, வாழப்பாடி பகுதியில் உள்ள கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் சேலம் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில், உதவி வனப் பாதுகாவலர்கள் செல்வக்குமார், கீர்த்தனா (பயிற்சி) மேற்பார்வையில் வனச்சரகர்கள் அன்னப்பன், முருகன், துரைமுருகன், உத்தரசாமி, தனபால், சுரேஷ் குமார், தண்டபாணி, செந்தில் குமார் தலைமையில் 75 வன ஊழியர்களை கொண்ட 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் நவீன ட்ரோன் மூலம் கண்காணிப்பு:
இவர்கள் அந்த கிராமங்களில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இக்கிராமங்களை ஒட்டியுள்ள கல்வராயன் மலை மற்றும் சிறிய குன்றுகளில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த காட்டிற்குள் யாரேனும் நுழைந்துள்ளார்களா என்பதை அறிய வனத்துறையினர் நவீன ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 ஆண்டுகள் சிறை தண்டனை:
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "வன உரியின பாதுகாப்பு பட்டியலில், அரியவகை வன விலங்காக வங்காநரி உள்ளது. அந்த விலங்கை பிடித்து வந்தால், 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், பொதுமக்கள் வங்காநரியை பிடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனை தடுக்க வாழப்பாடி பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். மேலும், வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி வங்காநரி ஜல்லிக்கட்டு தடுத்து நிறுத்தப்படும்" என்று தெரிவித்தனர்.

