ஓலைச்சுவடிகளை எவ்வாறு பாதுகாப்பது? - சேலம் அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு விளக்கம்
ஓலைச்சுவடிகளை பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்கும், மக்கும் தன்மை ஏற்படாமல் இருப்பதற்கும் ரசாயன கலவைகளை எந்த விகிதத்தில் கலந்து ஓலைச்சுவடிகள் மீது தடவ வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் சேலம் அரசு அருங்காட்சியகத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் 12 ஆம் நூற்றாண்டு முதல், 20 ஆம் நூற்றாண்டுகள் வரை கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, ஓலைச்சுவடிகள், பழங்கால ஆயுதங்கள், துப்பாக்கிகள், சாமி சிலைகள், பதப்படுத்தப்பட்ட பறவைகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பாம்புகள், கடல் உயிரினங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்ற பல்வேறு பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரலாற்று மாணவிகளுக்கு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகளை அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லைஅரசு நேற்று செயல்முறை விளக்கம் அளித்தார். ஓலைச்சுவடுகளில் பதப்படுத்தி, எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் அரசு அருங்காட்சியக காப்பாளர் முல்லை அரசு கூறுகையில், ”ஓலைச்சுவடிகள் நவீன முறையில் தற்போது பதப்படுத்தப்பட்டு வருகிறது. ஓலைச்சுவடிகளை பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்கும், மக்கும் தன்மை ஏற்படாமல் இருப்பதற்கும் ரசாயன கலவைகளை எந்த விகிதத்தில் கலந்து ஓலைச்சுவடிகள் மீது தடவ வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு” தெரிவித்தார். தற்போது மிகவும் பழமை வாய்ந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியம்மன் தாலாட்டு, விநாயகர் தாலாட்டு ஓலைச்சுவடிகள் அருங்காட்சியகத்தில் நவீன முறைப்படி பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்