திறக்கப்பட்ட வழிபாட்டு தளங்கள் - சேலம் மாவட்டத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
’’ஐயப்பா ஆசிரமத்தில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை துவங்கினர்’’
தமிழக அரசு நேற்று அறிவித்த கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து சேலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுப்பு மறுக்கப்பட்டு இருந்தது. வணிக நிறுவனங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.
இந்த நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், சுகவனேஷ்வரர் கோவில், குழந்தை இயேசு பேராலயம், சிஎஸ்ஐ பேராலயம் மற்றும் ஜாமியா மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மேலும் இன்று விஜயதசமி என்பதால், சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை துவங்கினர். விஜயதசமி தினத்தன்று கல்வி, தொழில் என எந்த காரியம் தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றியடையும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் சேலம் குரங்குச்சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு எழுத்துக்களை அறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து பச்சரிசியில் தமிழ் எழுத்துக்களை மோதிர விரலால் எழுத வைத்து எழுத்துக்களை அறிவித்தனர். தொடர்ந்து அனைவரும் ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான எண்ணிக்கையை விட நடப்பாண்டு குறைந்தளவு குழந்தைகளே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை, இந்த ஆண்டு அடுத்த மாதம் 1 ஆம் தேதி அங்கன்வாடி, ஆரம்பப் பள்ளிகள் முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியது எடுத்து இன்று விஜயதசமி நாள் என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. இதில் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியில் சேர்த்து மகிழ்ந்தனர்.