சேலத்தில் அரசு வழங்கிய நிலத்திற்கு அளவீடு செய்ய திமுக பிரமுகர் தடுப்பதாக மாற்றுத்திறனாளி மனு
நில அளவீடு செய்யும் அதிகாரியும் திமுக கவுன்சிலர் மிரட்டியதால் அவரும் அளவீடு செய்ய வராமல் உள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மாற்றுத்திறனாளி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கால்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள எனக்கு வேலை எதுவும் இல்லாமல் அவதியுற்று வருகிறேன். நாங்கள் வாழ்வதற்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக அரசிடம் போராடி வந்தோம். இந்த நிலையில் கடந்து மூன்று மாதத்திற்கு முன்பு என்னுடன் சேர்ந்து 8 பேருக்கு கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் தலா 3 சென்ட் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
நில அளவீடு செய்வதற்காக தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்ய முற்படும்போது, கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் நில அளவீடு செய்யக்கூடாது என்று அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். மேலும் இது குறித்து திமுக கவுன்சிலர் கேட்டதற்கு வேறு பகுதியில் இருந்து வரும் உனக்கு எதற்கு வீட்டு மனை பட்டா என்று கேட்டு தகாத வார்த்தையில் பேசியும் தாக்க முற்பட்டார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். எங்கு சென்று புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டுகிறார். இதனால் வேதனை அடைந்தாள் இது குறித்து கன்னங்குறிச்சி காவல் எழுத்தில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நில அளவீடு செய்யும் அதிகாரியும் திமுக கவுன்சிலர் மிரட்டியதால் அவரும் அளவீடு செய்ய வராமல் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து அரசு சார்பில் வழங்கப்பட்ட நிலத்திற்கு அளவீடு செய்து நிலத்தை வழங்க வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்தார். அரசு வழங்கிய நிலத்திற்கு அளவீடு செய்ய விடாமல் தடுக்கும் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று, சேலம் மாவட்டம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மனு அளிக்க காவல்துறையினர் ஒருவருக்கு மட்டும் அனுமதித்தினர். இதனிடையே காவல்துறையினர் நடத்தி விசாரணையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மின்இணைப்பு கேட்டு 17 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய உள்ளதாகவும், இதுவரை மின்இணைப்பு வழங்கவில்லை என வேதனை தெரிவித்தார். இதுகுறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்த நிலையில், மின்இணைப்பு வழங்குவதற்காக அதிகாரிகள் வந்தால், மணி என்பவர் மின் இணைப்பு வழங்க கூடாது என தடுப்பதாக குற்றம்சாட்டினர். இதனால் மின் இணைப்பு இல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக சிரமப்படுவதாகவும், குழந்தைகள் படிக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.