சேலத்தில் இரு தரப்பு இடையே மோதல்; கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு
கோயில் திருவிழாவை எடுத்து நடத்துவோம் என பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்ததால் இரண்டு தரப்பினர் இடையே கடும் மோதல்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை மாரியம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. இந்த ஆண்டு நாங்களும் கோவில் திருவிழாவை எடுத்து நடத்துவோம் என பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் மாரியம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் இரண்டு மணி அளவில் இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இரண்டு தரப்பினர் இடையே அதிகாரிகள் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரும் அதிகாரிகள் முன்னிலையில் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் முற்றிய நிலையில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி, டீக்கடை என 15 கடைகளுக்கும் மேல் இரண்டு தரப்பினரும் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஒரு கடைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. கற்களை வீசியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவட்டிப்பட்டி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். எங்களுக்கும் இந்த கோவிலில் பங்கு உண்டு, நாங்களும் இந்த ஆண்டு திருவிழாவை எடுத்து நடத்துவோம் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்பட்டது. மேலும் வட்டாட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது. அப்போதும் பட்டியலினா மக்களை கோவில் திருவிழாவை எடுத்து நடத்த அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று திருவிழாவை எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.