கிணற்றில் தவறி விழுந்த குழந்தை, காப்பாற்ற சென்ற தாய் - சேலத்தில் நேர்ந்த சோகம்
குழந்தை சுபஸ்ரீக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்த நிலையில் தாயும், சேயும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அடுத்துள்ள மாசிநாயக்கன்பட்டி வாத்தியார் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத். ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மீனா (25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில், நேற்று வினோத் வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில், வீட்டில் மாமியார் செல்வி மற்றும் மீனா அவரது குழந்தை சுபஸ்ரீ ஆகிய மூவர் இருந்துள்ளனர். அப்போது தென்னம்தோட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்வதற்காக மீனா குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குழந்தை தவறிவிழுந்ததாக கூறப்படுகிறது. பதறிப்போன தாய் மீனா, குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். மீனாவிற்கு நீச்சல் தெரியாத நிலையில் தாயும், சேயும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடனே இதுதொடர்பாக மாமியார் செல்வி உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின்பெயரில் விரைந்து வந்த அம்மாபேட்டை காவல்துறையினர் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் தாய், சேய் இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த மனைவியையும், குழந்தையையும் பார்த்து கணவர் வினோத் மற்றும் அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. இன்று குழந்தை சுபஸ்ரீக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்த நிலையில் தாயும், சேயும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சேலம் அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.