சேலத்தில் ஆடி திருவிழாவை ஒட்டி அம்மாபேட்டை பகுதியில் நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி
வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகளை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அம்மாபேட்டையில் குவிந்தனர்.
சேலம் அம்மாபேட்டை பகுதியில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று (12.08.2022) நடைபெற்றது. இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகளை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அம்மாபேட்டையில் குவிந்தனர். சிவன், பார்வதி, அம்மன், முருகன், விநாயகர் உள்ளிட்ட தேவலோக கடவுள்களின் ஒப்பனை புரிந்தவர்கள் அலங்கார வாகனங்களில் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை பரவசமடைய செய்தது. இதேபோல் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராமாயண காட்சிகள், கைலாய காட்சிகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. மேலும் செண்டை மேளம் முழங்க பறவைகள் நடனம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன. இது தவிர நெருப்பு வளையம் தாண்டுதல் உள்ளிட்ட வீர சாகச நிகழ்ச்சிகளும் திருவிழாவில் இடம் பெற்றிருந்தன.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் ஆடித் திருவிழா களைகட்டியுள்ளது. தீமிதித்தல், அலகு குத்துதல், கரகாட்டம், வான வேடிக்கை, வண்டி வேடிக்கை என சேலம் மாநகரம் முழுவதும் வைபவங்களும் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றது. சேலம் மாவட்ட செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருத்தேர் விழா நேற்று நடைபெற்றது. மாரியம்மன் திருக்கோவில் திருத்தேரினை மங்கள வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரடி பகுதியில் தொடங்கி அப்பு செட்டி தெரு, மாரியம்மன் கோவில் தெரு வழியாக முக்கிய வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட தேரோட்ட வைபவத்தை வழியெங்கிலும் பக்தர்கள் கண்டு அம்மனை வழிபட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் ஆடி மாதம் பண்டிகையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் சேலம் மக்கள் மகிழ்ச்சியோடு ஆடி மாதத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 18 பட்டிக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப் பண்டிகை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் கடந்த 26 - ஆம் தேதி பூச்சாட்டுகள் விழா உடன் மிகச் சிறப்பாக தொடங்கியது. இதன்பின் 8 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் 10 -ஆம் தேதி விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து ஆடி முதல் வாரத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இரண்டாம் வாரம் கம்பம் நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை ரத்து செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் இந்த ஆண்டு மாரியம்மன் பண்டிகை கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்